குறிப்பிட்ட காலகட்டத்தில் வேற்று மொழிப் படங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது பிராந்திய மொழிப் படங்களுக்கான முக்கியத்துவம் குறைந்து போகும். மக்கள் தாங்களாக முடிவெடுத்து அப்படங்களைக் காணச் செல்வது வேறு விஷயம்.
பல நேரங்களில் தியேட்டர் நிர்வாகங்களே அந்த முடிவைக் கையிலெடுக்கும். ‘இந்தப் படம் தான் ஓடும்’ என்றும், சில நேரங்களில் ‘இந்த படம் தான் ஓட வேண்டும்’ என்றும் முடிவெடுக்கும். அதற்கேற்ப, தியேட்டர்களுக்கு மக்கள் அதிகம் வருகிற மதியம் மற்றும் மாலை நேரக் காட்சிகளில் குறிப்பிட்ட படங்கள் திரையிடப்படும்.
மல்டிப்ளெக்ஸ் கலாசாரம் வந்தபிறகு இந்த வழக்கம் பன்மடங்காகப் பெருகியிருக்கிறது. சில படங்களைக் காணப் பார்வையாளர்கள் சென்றால், அவை காலை காட்சிகளாக அல்லது நள்ளிரவுக் காட்சியான ‘செகண்ட் ஷோ’க்களாக ஓடுகின்றன.
சென்னை போன்ற பெருநகரங்களில் தமிழ் தவிர்த்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் மட்டுமல்லாமல் குஜராத்தி, மராத்தி, பெங்காலி, அஸ்ஸாமி படங்களும் கூடத் திரையிடப்படுகின்றன. அந்த மாதிரியான நேரங்களில் தமிழ் மொழியில் வருகிற சிறு பட்ஜெட் படங்கள், நீண்டகாலமாக ஓடிக் கொண்டிருக்கிற படங்கள் திரையிட மறுக்கப்படுகின்றன அல்லது பார்வையாளர்கள் அதிகம் வராத நேரத்தில் மாற்றப்படுகின்றன.
’சில நேரங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்துகிற விதமான உள்ளடக்கம் கொண்ட படங்கள் என்று செய்திகள் வெளியாகும் பட்சத்தில், குறிப்பிட்ட சில படங்கள் அதிகக் காட்சிகள் திரையிடப்படாமல், பிரைம் டைம் அல்லாத நேரங்களில் திரையிடுகிற மாதிரியான வேலைகளும் நடக்கின்றன’ என்கின்றனர் சினிமா ஆர்வலர்கள்.
தமிழ்நாடு என்றில்லை, ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள சினிமா ஆர்வலர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், சினிமா கலைஞர்கள் இது போன்ற குரல்களை எழுப்பி வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அம்மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘பிரைம் டைமில் ஒவ்வொரு திரையரங்கிலும் பெங்காலி மொழிப் படங்கள் மட்டுமே திரையிடப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பெங்காலி மொழி திரைப்படங்களுக்குப் போதுமான வரவேற்பு கிடைக்கும் வகையிலும், மாநிலத்தில் அவற்றுக்கான வெற்றி வாய்ப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும் மாநில அரசின் நீண்ட கால முயற்சிகளுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டிருக்கிறது.
மேற்கு வங்க திரைப்பட (பொது திரையிடல் ஒழுங்குமுறை) விதிமுறைகள் 1956இல் இதற்காக திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது.
மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ‘பிரைம் டைம்’ என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த கால அவகாசத்திற்குள் திரையிடப்படுகிற இரண்டு திரைப்படங்களில் ஒன்று கண்டிப்பாக பெங்காலி மொழிப் படமாக இருக்க வேண்டுமென்பது இந்த உத்தரவின் மூலம் அமல்படுத்தப்படவுள்ளது.
‘தமிழ்நாட்டில் இருக்கும் தியேட்டர்களிலும் தமிழ் படங்களை குறிப்பிட்ட காட்சி நேரங்களில் மட்டுமே திரையிட ஆவண செய்ய வேண்டும்’ என்ற குரலை அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுப்பிவரும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த சிலரை ஊக்கப்படுத்துகிற விதமாக இச்செய்தி அமைந்துள்ளது.
