தப்பாகப் போகுமா அப்பாஸ் கூட்டு? – பதைபதைக்கும் வங்க காங்கிரஸ்!

Published On:

| By Balaji

இருபத்தைந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக மேற்கு வங்கத்தை ஆண்ட இடது முன்னணி அரசாங்கத்தை கடந்த இரண்டு முறை ஆட்சிக்கு வரவிடாமல், மலைப்பை உண்டாக்கிக்காட்டினார், மம்தா. முன்னதையும் பின்னதையும் போலவே அந்த மாநிலத்தில் இந்த தேர்தலிலும் திகைப்பை உண்டாக்கியிருக்கிறது, இடது முன்னணியின் புதிய கூட்டணி. குறிப்பாக, அப்பாஸ் சித்திக்கி ஆரம்பித்த (இ.ம.மு.)இந்திய மதச்சார்பற்ற முன்னணியுடனான கூட்டு!

காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பைத் தோற்றுவித்திருக்கும் இ.ம.மு. தரப்புக்கு புதுக் கட்சி எனும் நினைப்பு அறவே இல்லை! இடது முன்னணி உருவாக்கியுள்ள சம்ஜுக்த மோர்ச்சா எனப்படும் ஐக்கிய முன்னணி கூட்டணியில் இணைந்திருக்கும் இந்தக் கட்சிக்கும் காங்கிரசுக்கும் ஆரம்பத்திலிருந்தே உரசல்தான்!

கடந்த ஞாயிறன்று கொல்கத்தா பிரிகேட் பரேட் மைதானத்தைத் திணறவைத்த ‘மக்கள் படை’ பேரணியிலேயே இது வெளிப்பட்டது. இ.ம.மு.இன் நிறுவனர் அப்பாஸ் சித்திக்கியின் பேச்சு சற்று தூக்கலாகவே இருந்தது. ஒரு வாரத்துக்கு முன்னால் இந்தக் கூட்டணி முடிவாகியிருந்தால் இரண்டு மடங்கு கூட்டத்தைத் திரட்டியிருக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டதை, சாதாரணமாக ஒதுக்கிவிடக்கூடிய நிலைமை அங்கு இல்லை. ஆம், பெரிய கட்சிகளான இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகளின் செங்கொடிகளும் மூவர்ணக் கொடிகளுக்கு சமமாக, இ.ம.மு.வின் நீலம்-பச்சை-வெள்ளை கொடிகளும் பிரிகேட் பரேட் மைதானத்தில் பளிச்செனத் தெரியும்படி நிறைந்திருந்தன.

பிற்பகல் 2 மணியளவில் மாநில காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி பேசிக்கொண்டிருந்தபோது, அப்பாஸ் சித்திக்கி மேடைக்கு வந்தார். உடனே கூட்டத்திலிருந்து கைதட்டலும் முழக்கங்களும் காதைப்பிளந்தன. ’பைஜானை(அப்பாஸ்) நாங்கள் நேசிக்கிறோம், ஒவ்வொரு அவுன்ஸ் ரத்தமும் அவருக்கே’ என்றதுடன், வழக்கமான இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கமும் தெறிக்கவைத்தன. சிறிது நேரம் மேடையிலிருந்த தலைவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.

வழக்கமாக ஒரு தலைவர் வருகையில் அவரைச் சார்ந்தவர்கள் வெளிப்படுத்தும் உணர்வலைகள் தானே என்றபடி இருந்தனர். ஆனால் அதிர் ரஞ்சன் தொடர்ந்து பேசமுடியாத அளவுக்கு சத்தம் இடையூறாக இருந்ததால், காங்கிரஸ் தலைவர்கள் முகத்தைச் சுளித்தனர். பேச்சை நிறுத்தியபடி இருந்த அதிர் ரஞ்சன், மேற்கொண்டு நான் பேசவா வேண்டாமா எனக் கூற, இடதுசாரி தலைவர்கள் தலையிட்டு அப்பாஸ் சித்திக்கியிடம் சொல்லி கூட்டத்தை அமைதிப்படுத்தினர்.

ஒரு பக்கம் அதிமுகவுடன் தொகுதிப்பங்கீடு பேசிக்கொண்டே பொதுமேடையில் அந்தக் கட்சியை விமர்சனம் செய்யும் தேமுதிகவைப் போலவே, அப்பாஸ் சித்திக்கியின் அன்றைய பேச்சும் இருந்தது.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில், இடது முன்னணி தங்கள் வசமுள்ள 30 தொகுதிகளை இ.ம.மு.வுக்குப் பகிர்ந்து அளித்திருக்கிறது. காங்கிரஸ் வசமுள்ள தொகுதிகளைப் பங்கிடுவதில் பிரச்னை ஏற்பட்டது.

அந்த மேடையிலும் அப்பாஸ் சித்திக்கியின் பேச்சு இதை எதிரொலித்தது. “நாங்கள் யாரிடமும் இரந்து நிற்பதற்காக இங்கு வரவில்லை. கூட்டணியின் பங்காளிக்கட்சி என்கிறபடி சமமான உரிமைகளோடு இருப்பதை நிலைநிறுத்தவே வந்திருக்கிறோம். யாரிடமும் குனிந்துபோகமாட்டோம்.” என்றார் அவர்.

”சமுதாயத்தில் எங்களுக்கு உரிய பங்கைக் கேட்பதற்காகவே நாங்கள் பணியாற்றுகிறோம். எங்களுக்கு உரிய பங்கு வழங்கப்படவேண்டும்.” என்று குறிப்பிட்டதுடன்,

‘உனக்குரிய பங்கை யாரும் தராதபோது அதைப் பிடுங்கி எடுத்துக்கொள்’ என்ற அம்பேத்கரின் புகழ்பெற்ற வாசகத்தையும் சேர்த்துக்கொண்டு, ”அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என அப்பாஸ் சித்திக்கி பேசியது, உண்மையில் கனல்தெறிக்க வைத்ததுதான்.. குறைந்தது கூட்டணிக்கு உள்ளேயாவது!

கூட்டணிக்கு வெளியில் எதிர்த்தரப்பில் இருக்கும் பாஜகவோ, இடதுசாரிகளின் மதச்சார்பின்மை இந்தக் கூட்டணி மூலம் அம்பலப்பட்டுவிட்டதாக விமர்சனம் செய்துள்ளது. மம்தா தரப்பிலோ அப்பாஸ் கட்சிக்கு நேரடியான பதிலைத் தராமல் அவரைப் போன்ற மதகுரு ஒருவர் மூலம் போட்டியை உண்டாக்கப் பார்க்கிறார்கள். காரணம், வாக்குவங்கியில் இசுலாமியர்களின் 30 சதவீதப் பங்குதான்! வங்கத்தில் 100 முதல் 110 தொகுதிகள் வரை இசுலாமியர் வாக்காளர்கள் செல்வாக்காகவும் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருக்கிறார்கள் என்கின்றன புள்ளிவிவரங்கள்.

அதிலும் குறிப்பாகச் சொன்னால், வங்காளம் பேசும் இசுலாமியர்கள் இவர்கள் என்பதால், ஒவைசி போன்ற வெளி ஆள்கள் இங்கு வந்து போட்டியிட்டாலும், வங்கத்துக்காரர்களின் தயவின்றி அவர்களால் பெரிதாக சாதித்துவிடமுடியாது.

பத்து நாள்களுக்கு முன்னர்கூட ஒவைசியின் மஜ்லிஸ் கட்சியானது அப்பாஸ் சித்திக்கியுடன் கைகோர்த்து களம்காண்பதாகவே பலமாக பேசப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் காங்கிரஸ்+கம்யூனிஸ்ட் கூட்டணியில் அப்பாஸ் சித்திக்கி ஐக்கியம் ஆகிவிட்டார்.

இப்போதைய சிக்கலுக்குக் காரணம், காங்கிரசின் செல்வாக்குப் பகுதிகளான மால்டா, முர்சிதாபாத் மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்தான் வேண்டும் என அப்பாஸ் சித்திக்கி கேட்பதுதான். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசின் மீள் எழுச்சியை சாதித்துவிடவேண்டும் எனும் அக்கட்சியின் முனைப்புக்கு இது தடங்கலாக அமைந்துவிடுமோ என கதர்க்கட்சிக்காரர்கள் பதைபதைக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் இணக்கமான முடிவை எடுக்கவைக்கும் இடதுசாரிகளின் முயற்சியில், நேற்று சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அண்மைத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுஉறுதியானால்தான் இறுதிவரை இந்தப் பிணக்கு கணக்கில் வராமல் இருக்கும்!

**- இளமுருகு**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share