தமிழகத்தில் போலீசாருக்கு ஏன் சங்கங்கள் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. week off for police high court question
மதுரை ஆஸ்டின்பட்டியை சேர்ந்த காவலர் செந்தில்குமார் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அதில், “தமிழக காவல்துறையில் பணியாற்றுபவர்கள் அதிக பணிச்சுமையை சந்தித்து வருகின்றனர். ஓய்வே இல்லாமல் பணியாற்றும் சூழல் உள்ளது. இது தொடர்பாக ஏராளமான புகார்களும் எழுகின்றன.
காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரையில் பணியில் உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்க 2021ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த அரசாணை அமல்படுத்தப்படவில்லை.
விடுமுறை இல்லாமல் தொடர்ந்து பணிபுரிய வேண்டியுள்ளதால் காவலர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே போலீசருக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக 2021 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை முறையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு இன்று (ஏப்ரல் 21) நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது,“அரசு பிறப்பித்த அரசாணை ஏன் முறையாக அமல்படுத்தப்படவில்லை. ஒரு லட்சத்து 20 ஆயிரம் காவலர்கள் இருக்கும் நிலையில் ஒருவர் மட்டும் மனு தாக்கல் செய்திருப்பது பாராட்டத்தக்கது. மற்ற காவலர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள். இது மேல் அதிகாரிகளின் மீதான அச்சமா?” என்று கேள்வி எழுப்பினார்.
ஜனநாயகம் மற்றும் மனித உரிமை அனைவருக்கும் தானே என்று குறிப்பிட்ட நீதிபதி, “கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் காவலர்களுக்கு சங்கம் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் போலீசாருக்கு இதுவரை சங்கம் இல்லாதது ஏன்?.
தனியார் தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் சங்கங்கள் உள்ள நிலையில் காவல்துறையினருக்கு மட்டும் ஏன் சங்கம் இல்லை?.
இது ஜனநாயகத்துக்கு எதிரானது இல்லையா?.
முதல்வரின் உத்தரவையும் அதிகாரிகள் மதிப்பதில்லையா?.
2021 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால் அது விளம்பரத்துக்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையா?
போலீசாருக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசாணை எதன் அடிப்படையில் பிறப்பிக்கப்படுகிறது என்பது குறித்து டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார். week off for police high court question
