உதயசங்கரன் பாடகலிங்கம்
ரசிகர்களை வெல்கிறதா, கொல்கிறதா?!
வித்தியாசமான ‘ஐடியா’ உடன் சொல்லப்படும் கதைகள் ரசிகர்களைச் சட்டென்று ஈர்க்கும். அந்த வகையில், யாராலும் அழிக்க முடியாத ஒரு ‘சூப்பர் ஹீரோ’வை காட்டியது ‘வெப்பன்’டீசர் மற்றும் ட்ரெய்லர்.
தமிழில் இந்த வகைமையில் ஒரு படம் பண்ண முடியுமா என்ற ரசிகர்களின் சந்தேகங்களுக்கும் தீனி போடும் வகையில் அவை அமைந்திருந்தன. அதுவே சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்த அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. தற்போது இப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
சரி, இந்த படம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிறதா?
யாராலும் அழிக்க முடியாதவன்!
இரண்டாம் உலகப் போரில் அழிக்கவியலா போர்வீரர்களை உருவாக்கும் முயற்சிகளில் ஹிட்லரின் நாஜிப்படை ஈடுபட்டதாகக் காட்டுகிறது ‘வெப்பன்’ தொடக்கம்.
பிறகு, அதில் பங்கேற்ற ஒரு தமிழர் குறித்தும், அவர் அத்தகைய ஆற்றலைப் பெறுவதற்கான திரவமொன்றைத் தமிழ்நாட்டுக்கு எடுத்து வந்ததாகவும் திரைக்கதை நகர்கிறது.
அத்திரவத்தை அந்த மனிதர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தனது மகனுக்குச் செலுத்துகிறார். மித்ரன் (சத்யராஜ்) என்ற அந்த நபர் என்னவானார் என்ற தேடலைக் கொண்டிருக்கிறது ’வெப்பன்’ திரைப்படம்.
அக்னி (வசந்த் ரவி) எனும் இளைஞர் யூடியூப் சேனலொன்றை நடத்தி வருகிறார். அவந்திகா (தான்யா ஹோப்) அவரது தோழி. அவர் மட்டுமல்லாமல் இன்னும் சில நண்பர்களோடு இணைந்து, ‘சூப்பர் ஹீரோ’ தொடர்பான தேடலை தனது சேனலில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில், தேனி மலைப்பகுதியில் விபத்தில் அடிபடவிருந்த ஒரு சிறுவன் காற்றில் பறந்து வந்தது போன்ற ஒரு வீடியோவை அக்னி பார்க்கிறார். அதனைச் செய்தது ‘சூப்பர் ஹீரோ’தான் என்று நண்பர்களிடத்தில் சொல்கிறார். அந்த நபரைத் தேடி, அவர்கள் தேனி மலைப்பகுதிக்குப் பயணிக்கின்றனர்.
அதேநேரத்தில், தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு மக்களைத் திசை திருப்பும் வேலைகளை ஒரு கும்பல் செய்து வருகிறது. அந்த சிண்டிகேட்டின் தலைவராக இருக்கிறார் தேவ் கிருஷ்ணவ் (ராஜிவ் மேனன்). அவரது மகள் தான் அவந்திகா.
தனது சிண்டிகேட் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மர்மமான முறையில் உயிரிழக்க, இறக்கும் தருவாயில் அவர்கள் தொடர்பான காட்சிகளையும் தனது உளவு நெட்வொர்க் மூலம் காண்கிறார் தேவ். அதனால், அவையனைத்தும் இயற்கையான மரணம் அல்ல; கொலைகள் தான் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
தேனி சிறுவன் வீடியோவைப் பார்த்தபிறகு, அதில் சம்பந்தப்பட்டிருப்பது ஒரு ‘சூப்பர் ஹீரோ’ என்று யூகிக்கிறார். அவரைக் கண்டறியும் முயற்சியில் தனது ஆட்களை அனுப்புகிறார்.
அதேநேரத்தில், தேவ் கிருஷ்ணாவைப் பழி வாங்குவதற்காக அவரது மகள் அவந்திகாவைக் கடத்தத் திட்டமிடுகிறது ஒரு கும்பல். இப்படி எல்லா கும்பல்களும் தேனி வட்டாரத்தை முற்றுகையிட, அங்கிருந்த சூப்பர்ஹீரோ என்ன செய்தார் என்பதாக ‘வெப்பன்’ திரைக்கதை விரிகிறது.
இந்தக் கதையில் அப்படியொரு அழிக்கவியலா சூப்பர்ஹீரோவாக அமைந்துள்ளது ‘மித்ரன்’ எனும் பாத்திரம். அந்த வேடத்தில் நடித்திருப்பவர் சத்யராஜ்.
சோதிக்கும் திரைக்கதை!
ஒரு ‘சூப்பர் ஹீரோ’ என்று நம்பும்படியாகத் திரையில் கட்டுமஸ்தாக தோன்றியிருக்கிறார் சத்யராஜ். இந்த வயதிலும் அதற்காக அவர் மெனக்கெட்டிருப்பதை நாம் பாராட்டத்தான் வேண்டும்.
சத்யராஜ் உடன் நேருக்கு நேர் மல்லுக்கட்டும் வகையில், இதில் வசந்த் ரவி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தான்யா ஹோப் வந்து போயிருக்கிறார்.
ராஜிவ் மேனன், ராஜிவ் பிள்ளை, வேலு பிரபாகரன் உள்ளிட்ட சிலரும் இப்படத்தில் உண்டு. இன்னும் கனிகா, மைம் கோபி, யாஷிகா ஆனந்த், வினோதினி வைத்தியநாதன், கஜராஜ், குமார் நடராஜன் என்று நம் கவனத்தைக் கவர்ந்த சில கலைஞர்கள் இதில் இரண்டு காட்சிகளில் தலைகாட்டிவிட்டு காணாமல் போகின்றனர்.
கதையே அப்படித்தான் முதலில் எழுதப்பட்டதா அல்லது கடைசிநேர படத்தொகுப்பில் அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் வெட்டி வீசியெறியப்பட்டதா என்பது படக்குழுவுக்கே வெளிச்சம்.
ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ், கலை இயக்குனர் சுபேந்தர், டிஐ மற்றும் விஎஃப்எக்ஸ் குழுவினர், ஆடை வடிவமைப்பாளர், ஒலி வடிவமைப்பாளர் என்று பலரும் இதில் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளனர்.
’ஒவ்வொரு காட்சியையும் செறிவாக்குகிறேன் பேர்வழி’ என்று பாதிக் காட்சிகளைக் குதறி வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா.
ஜிப்ரான் இசையில் பின்னணி இசை ஆங்காங்கே பெரிதாகச் சத்தமெழுப்பி, திரையில் விறுவிறுப்பூட்ட முயன்றிருக்கிறது.
இந்த படத்தில் வில்லன்கள் என்று ஆறேழு பேர்களைக் கைகாட்ட முடியும். ஆனால், அவர்களையெல்லாம் விட இயக்குனர் குகன் சென்னியப்பனின் திரைக்கதைதான் ஆகப்பெரிய வில்லன் ஆகத் தெரிகிறது. ’விடுவேனா பார்’ என்று நம்மை சோதனைக்கு உள்ளாக்குகிறது.
முன்பாதி முழுக்கப் பாத்திரங்கள் அடுத்தடுத்து திரையில் அறிமுகமாகியவாறே இருக்கின்றன. சரி, ஏதோ புதிதாகச் சில விஷயங்கள் இருக்குமென்று எதிர்பார்த்தால், இரண்டாம் பாதியில் ‘ஒரு ஊர்ல..’ என்று ஒரு கதை சொல்லப்படுகிறது. அதைப் பார்த்து முடித்ததும் ‘இதுக்காடா இவ்வளவு அக்கப்போரு’ என்று வடிவேலு வாய்ஸில் நம்மை நாமே நொந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
எந்திர கதியில் பாத்திரங்கள் உதிர்க்கும் வசனங்கள், பல்வேறுபட்ட சூப்பர்ஹீரோ படங்களை நினைவூட்டும் காட்சியமைப்பு, ‘தெய்வ மகன்’ படத்தை ‘ரொம்ப மோசமாக’த் தழுவி அமைக்கப்பட்ட கிளைமேக்ஸ் திருப்பம், ரசிகர்கள் மனதோடு ஒட்டவே மாட்டேன் என்று அடம்பிடிக்கிற திரைக்கதை கூறுகள் என்று பல அம்சங்கள் ‘வெப்பன்’ படத்தின் வெற்றியைக் கீழிறக்கி இருக்கின்றன. சில இடங்களில் ‘ஸ்டாக் ஷாட்’கள் நிறைய வந்து போகின்றன.
திரைக்கதையின் மையமாக விளங்கும் அக்னி பாத்திரம், ஏன் சூப்பர்ஹீரோவை தேடி அலைய வேண்டும்? அப்படித் தேடும் எண்ணம் எப்போது, ஏன் ஏற்பட்டது? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருந்தால், இந்த திரைக்கதையின் போக்கே வேறுவிதமானதாக மாறியிருக்கும். அது நிகழாததுதான் இப்படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் மனதை வெல்வதற்குப் பதிலாகக் குத்திக் கிழிக்க வகை செய்கிறது/
உண்மையைச் சொன்னால், ‘க்ளிஷே’க்கள் பட்டவர்த்தனமாகத் தெரியும் வகையில் கூட இதன் திரைக்கதையை வடித்திருக்கலாம். அதன் வழியே, கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சியனுபவமாவது கிடைத்திருக்கும். அதையும் நழுவச் செய்திருக்கிறது இயக்குனர் குகன் சென்னியப்பனின் ‘வித்தியாசமான கதை சொல்லல்’ உத்தி.
தமிழில் சூப்பர் ஹீரோ படங்களைத் தொடர்ந்து உருவாக்க முடியும் என்ற இயக்குனரின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது. அதற்கேற்ற அடித்தளத்தோடு திரைக்கதையை உருவாக்கியிருந்தால், தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களில் வெவ்வேறுவிதமான காட்சியனுபவங்களைப் பரிசளித்திருக்கலாம்.
அதற்கான வாய்ப்புகளைக் கொஞ்சமும் தராத வகையிலேயே ‘வெப்பன்’ வார்க்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், ஒரு பொன்னான வாய்ப்பினை ‘மிஸ்’ செய்திருக்கிறது இப்படக்குழு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”வந்துட்டேன்னு சொல்லு” – விண்வெளி நிலையத்தில் நடனமாடிய சுனிதா வில்லியம்ஸ்