ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியாக நேற்று நடைபெற்ற குவாலிபயரில் பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசூர பாய்ச்சலுடன் பைனலுக்கு முன்னேறியுள்ளது ஆர்.சி.பி. we will win at eleminatior against gt – MI hardik
இந்த நிலையில் முல்லன்பூரில் இன்று (மே 30) இரவு மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையேயான எலிமினேட்டர் போட்டி நடைபெற உள்ளது.
இதில் தோற்கும் அணி தொடரை விட்டு நேரடியாக வெளியேறும். ஜெயிக்கும் அணி பஞ்சாப் அணியுடன் 2வது குவாலிபயர் சுற்றில் மோதும்.
அந்தவகையில் தனது 6வது கோப்பைக்கான பயணத்தில் மும்பை அணியும், 2வது கோப்பைக்காக குஜராத் அணியும் போராடும் என்பது நிச்சயம்.

இந்த நிலையில் போட்டிக்கு முன்னதாக இரு அணி கேப்டன்களும் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.
வீரர்கள் ஆர்வமாக உள்ளனர்!
குஜராத் கேப்டன் சுப்மன் கில் பேசுகையில், “கடைசி லீக் போட்டியில் சென்னை அணியிடம் அடைந்த தோல்வி, எங்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. எனினும் நல்ல விஷயம் என்னவென்றால், எங்களுக்கு இரண்டு அல்லது மூன்று ஆட்டங்கள் மீதமுள்ளன. எனவே வீரர்கள் முல்லன்பூரில் விளையாட ஆர்வமாக உள்ளார்கள். அதிர்ஷ்டவசமாக எனது சொந்த ஊரில் இன்று விளையாட உள்ளேன். இங்கு நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன், அது மிகவும் உற்சாகமாக இருக்கும்” என கில் பேசினார்.
அதை கண்டுபிடிப்பது அவசியம்!
தொடர்ந்து மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், “ஒட்டுமொத்தமாக, நல்ல கிரிக்கெட்டை விளையாடுங்கள், நன்றாக பேட்டிங் செய்யுங்கள், நன்றாக பந்து வீசுங்கள், திட்டங்களில் கவனத்தை வையுங்கள் என வீரர்களிடம் கூறியுள்ளோம். சீசன் முழுவதும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பேட்டிங் செய்யும்போது, சரியான டிராக்குகளில் சரியான டெம்ப்ளேட் எது என்பதை நாங்கள் கண்டுபிடிப்பது அவசியம். பதற்றமின்றி போட்டியை அணுக வேண்டியது முக்கியம். அப்படி செய்தால் போட்டியில் வெற்றி எங்களுக்கே” என ஹர்திக் பாண்டியா பேசினார்.