”ஜெயலலிதா உயிருடன் இருக்கும்பொழுது டி.டி.வி. தினகரனை கண்டு பயந்தது உண்மைதான். ஆனால் இப்போது அவர் காட்டும் வாய்ச்சவடாலுக்கு புழு கூட பயப்படாது” என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தேனி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக நாரயணசாமி களமிறக்கப்பட்டுள்ளார். அதே தொகுதியில் திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணி வேட்பாளராக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் மதுரை வாடிப்பட்டியில் நாராயணசாமியை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று (மார்ச் 30) பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர், “தேனி தொகுதியை கடந்த 15 ஆண்டுகளாக எட்டிப் பார்க்காதவர் டிடிவி தினகரன். ஜெயலலிதாவால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் தான் மக்களிடம் தலைகாட்ட ஆரம்பித்தார். ஆர்.கே.நகர் தொகுதியில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து ஏமாற்றி வெற்றி பெற்ற அவர், அதன்பின்னர் அங்குள்ள மக்களால் விரட்டியடிக்கப்பட்டார். இதனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டியில் போட்டியிட்டார். அங்கு அவரை மக்கள் தோற்கடித்தனர்.
இந்த நிலையில் கடைசி புகலிடமாக இப்போது பாஜக துணையுடன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கும் அவரை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை.
ஆனால் அதையெல்லாம் கண்டும் காணாமல் வீராப்புடன் தேனி தொகுதியை டிடிவி சுற்றி வருகிறார். இந்த வீராப்பெல்லாம் தேனியில் எடுபடாது.
அவர் என்னை பபூன் என்று விமர்சித்துள்ளார். அதை ஏற்றுக்கொள்கிறேன். பபூனால் யாருக்கும் எந்த தீமையும் இருக்காது; ஆனால் டிடிவி தினகரன் போன்ற வில்லன்களால்தான் பிரச்சனை.
கிளைமேக்ஸில் நான் (பபூன்) வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் நாராயண சாமி (ஹீரோ) உடன் நிற்பேன். ஆனால் டிடிவி (வில்லன்) பெரா வழக்கில் கைதாகி சிறைக்கு செல்வார்.
டிடிவி தினகரன் தனது வாய்ச்சவடாலை குறைத்துக் கொள்ள வேண்டும். வாய் சவடாலால் வீணாய் போனவர்தான் அவர்.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்பொழுது டி.டி.வி. தினகரனை கண்டு அதிமுகவினர் பயந்தது உண்மைதான். ஆனால் இப்போது அவர் காட்டும் வாய்ச்சவடாலுக்கு புழு கூட பயப்படாது.
ஜெயலலிதா இருக்கும்போது டிடிவி வீட்டு காவல் நாயாகக்கூட இருந்தோம். ஆனா இப்போது நிலைமை வேற.. அதிமுக தொண்டர்கள் அனைவரும் இப்போது சீறும் சிங்கங்களாக மாறிவிட்டோம். இந்த தேர்தலில் டிடிவி தினகரன் தோற்பது உறுதி” என்று ஆர்.பி. உதயகுமார் பேசியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா