செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜனவரி 23) பிரதமர் மோடி தலைமையில் என்.டி.ஏ.கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதுவரை எதிரும் புதிருமாக இருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒரே மேடையில் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன் பின் என்.டி.ஏ கூட்டணியின் தமிழக தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, ‘தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைத்துள்ளது’ என்றார் எடப்பாடி பழனிசாமி.
இன்னும் சில கட்சிகள் இணையும் என்று சொல்கிறீர்களே எந்தெந்த கட்சி? என்ற கேள்விக்கு அதையெல்லாம் வெளிப்படையாக எதுவும் பேச முடியாது. சில கட்சிகள் எங்களோடு வர இருக்கின்றனர் என தெரிவித்தார்.
மேலும் டிடிவி தினகரன் இணைந்தது பற்றிய கேள்விக்கு, “நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிற எண்ணமே உங்களுக்கு இல்லை. நானும் சரி, டிடிவி தினகரனும் சரி ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம். நாங்கள் எல்லாம் அம்மா வளர்த்த பிள்ளைகள் என்று தெளிவுபடுத்திவிட்டோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தது. எப்போது இணைந்தோமோ அதை மறந்துவிட்டோம். ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளைத் தொடரவும், தமிழகத்தில் மீண்டும் “அம்மா ஆட்சியை” கொண்டு வரவும் நாங்கள் இணைந்துள்ளோம்” என்று பதிலளித்தார்.
பின்னர் பேசிய டிடிவி தினகரன், “இது குடும்ப பிரச்சினை. மன கசப்பில் பிரிந்து இருந்தது உண்மை. 2021லேயே அமித்ஷா முடிவு செய்தார். முடியாமல் போய்விட்டது. பின்னர் மோடி, நீங்களும் எடப்பாடியும் பழனிசாமியும் ஒற்றுமையாக இருந்து திமுகவை வீட்டுக்கு அனுப்ப துணையாக இருக்க வேண்டும் என்றார். அதற்கு ஒத்துக்கொண்டு வந்தேன். அது நடந்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.
எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் அளித்த பிறகுதான் என்னை அழைத்து பேசினார்கள். வேறு எந்த அழுத்தமும் கிடையாது.2017 ஏப்ரல் மாதம் எப்படி இருந்தோமோ, அதுபோல இப்போது அண்ணன் தம்பிகளாக ஒன்றிணைந்துவிட்டோம். எங்களுக்குள் பிரச்சினை இல்லை. எனவே எங்களை விமர்சிப்பவர்களுக்கு இரண்டு பேருமே பதிலடி கொடுப்போம்” என்றார்.
பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, “வைகோ எந்தளவுக்கு திமுகவை பற்றி விமர்சனம் செய்தார். ஸ்டாலினை பற்றி எப்படி பேசினார். அதையெல்லாம் நீங்கள் செய்திகளில் போடவில்லை. அவர் திமுகவில் இணையவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.
“எமர்ஜென்சி, மிசா சட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ். அப்போது திமுக என்ன சொன்னது… இந்த சட்டங்களால் நாங்கள் சிறைக்கு போனோம் என்றார்கள். இதுகூட பரவாயில்லை, அறிவாயலத்தில் மேல் தளத்தில் ரெய்டு நடத்தினார்கள். கீழ் தளத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. அப்படிபட்ட கட்சியெல்லாம் கூட்டணி அமைத்தபோது, எங்களுக்கு எந்த வித சங்கடமும், மனகசப்பும் கிடையாது” என்றும் குறிப்பிட்டார் எடப்பாடி பழனிசாமி.
