நீங்கள் நலமா? திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கும் நிலையில், திமுக ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண், காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் என தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மக்களுக்குப் போய் சேர்கிறதா என்பதை உறுதி செய்வதற்கு நீங்கள் நலமா திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று (மார்ச் 6) ‘நீங்கள் நலமா?’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
“தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் முதன்மையான நோக்கம். மக்கள் நல்வாழ்வுக்காக வகுக்கப்படும் திட்டங்களின் பயன்கள் உங்களுக்கு வந்து சேர்வதை உறுதி செய்வதற்காக இந்த “நீங்கள் நலமா” என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளேன்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த நிலையில், திமுக ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை என்று கூறி எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “”நீங்கள் நலமா” என்று கேட்கும் ஸ்டாலினே- நலத் திட்டங்கள் நின்றுபோச்சு! சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு! சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு!
விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு!எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு!
இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை!” என்று குறிப்பிட்டு “#நாங்கநலமாஇல்லை_ஸ்டாலின்” என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்துள்ளார்.
இதனால் 43 ஆயிரத்துக்கும் அதிகமான பதிவுகளுடன் நாங்க நலமா இல்லை_ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அமலாக்கத் துறை சம்மன்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கலெக்டர்கள் மனு!