ஹர்பஜன், தவான், யூசுப் உள்ளிட்ட வீரர்கள் விளையாட மறுத்ததால் WCL தொடரில் இன்று (ஜூலை 20) நடைபெற இருந்த இந்தியா-பாகிஸ்தான் லெஜண்ட்ஸ் போட்டி ரத்து செய்யப்பட்டது. wcl india pakistan legends match cancelled today
இங்கிலாந்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபெறும் உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் தொடர் கடந்த 18ஆ தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
அதன்படி பர்மிங்காமில் மைதானத்தில் இன்று நடைபெற இருந்த போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் ஷாகித் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோத இருந்தன.
இந்திய அணியில் ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், யூசுப் பதான், இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, பியூஸ் சாவ்லா, ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன், வினய்குமார், அபிமன்யூ மிதுன், சித்தார்த் கவுல் மற்றும் குர்கீரட் மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் அணியில் யூனிஸ் கான், சோஹைல் தன்வீர், வஹாப் ரியாஸ், கம்ரான் அக்மல் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் உள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்பதால் போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். இந்த நிலையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை சுட்டிக்காட்டி இந்தியாவின் ஹர்பஜன், தவான், யூசுப் உள்ளிட்ட வீரர்கள் பாகிஸ்தானுடன் விளையாட மறுப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஷிகர் தவான் தரப்பில் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளிப்படையாக மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், “WCL லீக்கில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான எந்தப் போட்டிகளிலும் ஷிகர் தவான் பங்கேற்க மாட்டார் என்பதை முறையாக மீண்டும் வலியுறுத்தவும் உறுதிப்படுத்தவும் இது செய்யப்படுகிறது. இந்த முடிவு மே 11, 2025 அன்று தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் மூலம் நாங்கள் நடத்திய கலந்துரையாடலின் போது முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து போட்டி ரத்து செய்யப்பட்டதற்கான அறிக்கையை WCL அமைப்பாளர்கள் தங்கள் X கணக்கில் வெளியிட்டனர்.
அதில், “இந்த வருடம் பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியா வரும் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட பிறகும், சமீபத்தில் நடந்த இந்தியா vs பாகிஸ்தான் கைப்பந்து போட்டி மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வேறு சில போட்டிகளையும் வெவ்வேறு விளையாட்டுகளில் பார்த்த பிறகு, உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சில மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்க, WCL இல் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியைத் தொடர நினைத்தோம்.
ஆனால் இது பலரின் உணர்வுகளை பாதித்துள்ளது. எனவே, இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். நாங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியதற்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், ரசிகர்களுக்கு சில மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டுவருவது மட்டுமே நாங்கள் விரும்பினோம் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம்,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
