கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், நிவாரணப் பணிகளுக்காக திரைக் கலைஞர்கள் நிவாரண நிதி வழங்க தொடங்கியுள்ளனர்.
கேரள மாநில அரசு நிவாரண நிதி கேட்டு அறிவிப்பு வெளியிட்டவுடன் இந்திய சினிமாவில் முதல் ஆளாக நடிகர் விக்ரம் 20 லட்சம் ரூபாய் வழங்கினார். அதனை தொடர்ந்து நடிகை ரஷ்மிகா மந்தனா 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
நடிகர் சூர்யா, ஜோதிகா, மற்றும் கார்த்தி ஆகிய மூவரின் சார்பாக 50 லட்ச ரூபாய் கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளதாக நேற்று மாலை அறிவித்தனர்.
முன்னதாக நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் வயநாடு துயரச்சம்பவம் குறித்து இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட பதிவில், “வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இதயம் நொறுங்குகிறது. மீட்பு நடவடிக்கைகளில் குடும்பங்களுக்கு உதவி செய்யும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் மற்றும் களத்தில் உள்ள மக்களுக்கும் என்னுடைய வணக்கங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
நடிகரும், மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சார்பில் 25 லட்சம் ரூபாய் கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் என மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் மலையாள நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களையும், பாக்ஸ் ஆபீஸ் வசூலையும் கொண்டிருக்கும் நடிகர்களில் ரஜினிகாந்த், விஜய், அஜீத்குமார் ஆகியோர் முக்கிய மானவர்கள்.
இவர்கள் கேரள முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு எவ்வளவு வழங்கப் போகிறார்கள் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
”அமலாக்கத்துறைக்காக காத்திருக்கிறேன்” : ராகுல் காந்தி
பட்ஜெட்… மாணவர்களுக்கு மாதம் ரூ.1000: தமிழ்நாட்டைப் பின்பற்றும் புதுச்சேரி