வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.5 கோடி நிவாரண நிதிக்கான காசோலையை முதல்வர் பினராயி விஜயனிடம் அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று (ஜூலை 30) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் இன்னும் 190 பேரை காணவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு அரசு நேற்று காலையிலேயே தமிழ்நாடு பேரிடர் மீட்புக்குழுவை அனுப்பியது.
கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.5 கோடி நிவாரணம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்தத் தொகையை கேரள முதல்வரிடம் தன் சார்பாக நேரில் சென்று வழங்குமாறு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் முதல்வர் நேற்று தெரிவித்தார்.
இதையடுத்து உடனடியாக கேரளா புறப்பட்டார் அமைச்சர் எ.வ.வேலு. இன்று (ஜூலை 31) அமைச்சர் எ.வ.வேலு, திருவனந்தபுரத்தில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ரூ. 5 கோடிக்கான காசோலையை வழங்கினார். இதற்காக தமிழகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் பினராயி விஜயன். தொடர்ந்து வயநாட்டின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார் அமைச்சர் வேலு.
இந்தசூழலில் நிவாரண உதவிகள் வழங்குமாறு பொது மக்களை முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொகை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை கேரள மக்கள் மீண்டு வர நிதியுதவி அளியுங்கள். நிதி அளிக்க விரும்புவோர் 67319948232 என்ற எஸ்பிஐ வங்கி கணக்குக்கு நிதி அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
பணமாக அளித்து உதவ விரும்புபவர்கள், கேரள அரசின் அதிகாரபூர்வ இணையதளமான https://kerala.gov.in/ என்ற இணையதளத்திலும், பொருள்களாக அளிக்க விரும்புபவர்கள் 1077 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என்று கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
நடிகர் விக்ரம் கேரளாவுக்கு 20 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக அனுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
கட்சியில் வீரமிகு பாண்டியன், ஆட்சியில் பத்தரை மாற்றுத் தங்கம்! – தங்கப்பாண்டியன் நினைவில் திமுக
பெலிக்ஸுக்கு ஜாமீன்: ரெட்பிக்ஸ் சேனலை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு!