அண்ணே… புதுசா இருக்குண்ணே… புதுசா இருக்கு! – மதுரையை கலக்கும் தர்பூசணி பரோட்டா!

Published On:

| By christopher

watermelon parrotta goes viral

கோடைக்காலத்தை முன்னிட்டு மதுரையில் வரவேற்பை பெற்ற தர்பூசணி பரோட்டா இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வாட்டி வதைத்து வருகிறது.

அதனை முன்னிட்டு சாலையோரங்களில் நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, கிர்ணி, நுங்கு, இளநீர் போன்றவற்றின் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் பரோட்டாவுக்கு பெயர் போன தமிழ்நாட்டில், இந்த கோடைக்காலத்தை முன்னிட்டு தற்போது மக்களை கவரும் புதுவகை பரோட்டாவை அறிமுகப்படுத்தி வெற்றிக் கண்டுள்ளனர் மதுரை ஹோட்டல் உரிமையாளர்கள்.

சாப்பாடு பிரியர்களின் மனம் கவர்ந்த மதுரையில் தற்போது பரோட்டா மாவில் தர்பூசணி சாறு சேர்த்து, பரோட்டாவின் சுவையில் புதிய மாற்றம் செய்துள்ளனர்.

மதுரையின் விளக்குத்தூண் பகுதியில் இருக்கின்ற ஒரு சின்ன ஓட்டலில் தான் முதன்முதலில் தர்பூசணி பரோட்டாவை அறிமுகம் செய்தனர். அது மக்களிடம் வரவேற்பை பெற்றதை அடுத்து, தற்போது மாவட்டம் முழுவதும் ஹிட் அடித்துள்ளது.

பரோட்டா மாவு தயார் செய்யும் போதே, தர்பூசணி சாற்றை அதில் சேர்க்கிறார்கள். அது மாவுக்கு ஒரு mild sweet டேஸ்ட் கொடுக்கிறது. அதன்பிறகு மாவினை சாஃப்டாக பிசைந்து, சின்ன உருண்டைகளாக மாற்றி பரோட்டா தட்டுகிறார்.

அதனை நெய் தடவிய தவாவில் சுட்டு எடுத்து விற்பனைக்கு வைக்கிறார்கள். சிலர் வட்டவடிவிலான தர்பூசணி துண்டையும் உள்ளே வைத்து பரோட்டா சுடுகின்றனர்.

சிவப்பு நிறத்தில் இருக்கும் பரோட்டாவில் சிலர் வழக்கம்போல சால்னா ஊற்றியும், சிலர் அந்த இனிப்பு சுவைக்காக வெறும் பரோட்டாவையும் சாப்பிடுகிறார்கள்.

ஒரு தர்பூசணி பரோட்டா சராசரியாக 40 முதல் 60 ரூபாய் வரைக்கும் விற்பதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மதுரையில் உள்ள டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார் டிடி தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், ”வெயில் காலத்தில் மட்டும்தான் தர்பூசணி விற்பனை அதிகமாக நடக்கும். சமீபத்தில் ஏற்பட்ட சில பிரச்னையினால் தர்பூசணி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அதனால் தர்பூசணி விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், தர்பூசணியை விரும்பக்கூடிய மக்களுக்காகவும், அதனை பிரபலப்படுத்தும் வகையில் பரோட்டாவுக்கு பிரபலமான மதுரையில் இந்த தர்பூசணி பரோட்டாவை அறிமுகப்படுத்தியுள்ளோம். சாப்பிட்டு பார்த்தோம் நன்றாக இருந்தது. இன்றைக்கு மக்களால் விரும்பி வாங்கப்படும் இந்த தர்பூசணி பரோட்டோ வைரலாகி வருகிறது” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share