டெல்லியில் தண்ணீர் டேங்கர் மோதி 5 பேர் காயம்!

Published On:

| By admin

தென்கிழக்கு டெல்லியின் பதர்பூர் பகுதியில் உள்ள பரபரப்பான சந்தையில் வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் மோதியதில் 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவில், டேங்கர் லாரி பரபரப்பான சந்தை பகுதிக்குள் நுழைந்து, அருகில் நிற்கும் மக்களை மோதியது தெளிவாக பதிவாகியுள்ளது.

டேங்கர் லாரி வேகமாக உள்ளே நுழைந்ததும் மக்கள் கூட்டம் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அங்குமிங்கும் ஓடினர். மேலும் அந்த டேங்கர் லாரி அங்கிருந்த காய்கறி கடைகளையும் சேதப்படுத்தியது வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து அந்த இடத்துக்கு விரைந்த போலீஸார் டேங்கர் உரிமையாளர் மீதும், ஓட்டுநர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். டேங்கர் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 279 (பொது வழியில் வேகமாக வாகனம் ஓட்டுதல் அல்லது சவாரி செய்தல்) மற்றும் 337 (மற்றவர்களின் உயிருக்கோ தனிப்பட்ட பாதுகாப்புக்கோ ஆபத்தை ஏற்படுத்தும் செயலால் காயம் ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து டேங்கர் உரிமையாளர், ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “டேங்கர் ஓட்டுநர் சம்பவம் நடந்த உடனே தப்பி ஓடி விட்டார். அவர் மொபைல் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அதனால் டேங்கர் உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share