ஓசூர் மாவட்ட வனப்பகுதியில் காடுகளை விட்டு ஊருக்கு விலங்குகள் வெளியேறாமல் தடுக்க கோடைக்காலம் தொடங்கும் முன்பு தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி தொடங்கியுள்ளது.
ஓசூர் வனக்கோட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஜவளகிரி உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் அமைந்துள்ளன.
இதில் கர்நாடக மாநில வனப்பகுதிகளான கோடிஹள்ளி, ஹாரஹள்ளி, ஆனேக்கல் உள்ளிட்ட காப்புக்காடுகளையொட்டி ஜவளகிரி வனச்சரகம் அமைந்துள்ளது.
இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, புள்ளி மான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது. கோடைக்காலங்களில் இங்கிருந்து வனவிலங்குகள் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளுக்கு இடம்பெயர்வது வழக்கம்.
இந்த நிலையில், கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கடும் வெயில் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வேகமாக குறைந்து வருகிறது.
இதனால் கோடைக்காலங்களில் வனவிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வனத்தைவிட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்கு இடம் பெயரும் என்பதால்,
தற்போது ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் வனத்துறையினர் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்கும் தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகள் மற்றும் தீவனப்புல்கள் வளர்க்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதில் அஞ்செட்டி வனப்பகுதியில் உள்ள மூன்று பெரிய தண்ணீர் தொட்டிகளில் வன ஊழியர்கள் டிராக்டர்களில் தண்ணீர் கொண்டு வந்து தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதே போல் சோளர் மற்றும் ஆழ்துளை கிணறுகளை பராமரிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள வனத்துறையினர்,
“ஜவளகிரியையொட்டி உள்ள கர்நாடக மாநில வனப்பகுதிகளில் உள்ள யானை, மான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் கோடைக்காலங்களில் தண்ணீர் குடிக்க அஞ்செட்டி வனப்பகுதி வழியாக செல்லும் காவிரி ஆற்றுப் படுகைக்காக வருகிறது.
அப்போது வனப்பகுதியில் வனவிலங்குகள் சுற்றும்போது தண்ணீர் தேவைப்படும் என தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் சோலார் மின் தடுப்பு வேலிகளையும் பராமரித்து வருகிறோம்.
தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் குறைய குறைய தொடர்ந்து தண்ணீர் நிரப்பும் பணியை கோடைக்காலம் முழுவதும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி கோடைக்காலம் முழுவதும் வனத்தில் உள்ள தொட்டிகளில் டிராக்டர் மூலம் குடிநீர் நிரப்பப்படும். இதன் மூலமாக வனவிலங்குகள் தண்ணீர் தேடி காப்புக் காடுகளை விட்டு வெளியேறுவது தடுக்கப்படுகிறது.
அதேபோல் வனப்பகுதிகளையொட்டி கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை விரைந்து அறுவடை செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பனீர் மக்கானி பாஸ்தா
இதுக்கு பேரு தான் மய்யம்: அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை இல்லாமல் சந்தோஷ் நடத்திய முக்கிய கூட்டம்… அதிரடி முடிவு!