தாமிரபரணியில் தண்ணீர் திறப்பு: கார் சாகுபடியில் விவசாயிகள்!

Published On:

| By admin

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கார் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் பிரதானமாக கார், பிசான சாகுபடிகளில் விவசாயிகள் ஆண்டாண்டு காலமாக ஈடுபட்டு வருகிறார்கள். தண்ணீர் கிடைப்பதைப் பொறுத்து கோடை நெல் சாகுபடியும் ஆங்காங்கே நடைபெறுவதுண்டு. கார் சாகுபடிக்காக ஆண்டின் ஜூன் முதல் வாரத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

ADVERTISEMENT

தற்போது நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை பெய்தது. மேலும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததாலும் பாபநாசம், மணிமுத்தாறு போன்ற அணைகளில் நீர்மட்டம் 65 அடிக்கும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கார் சாகுபடிக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வடக்கு – தெற்கு கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடியன் கால்வாய்களிலும் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையே, நெல் சாகுபடிக்காக விவசாயிகள் தங்களுடைய வயல்களை உழுது தயார்படுத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மாதேவி, பாபநாசம், வீரவநல்லூர் கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன.

நெல் பயிர் நடவு பணி மட்டுமின்றி, நெல் நாற்று பாவும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. சில இடங்களில் கிணறு உள்ள விவசாயிகள் ஏற்கனவே நாற்று பாவி தயார்நிலையில் நாற்று வைத்திருந்தனர். அவர்கள் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதும் நெல் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் உள்ள விவசாயிகள் அதிகம் பேர் கிணற்று பாசனம் உள்ளவர்கள். இவர்கள் ஏற்கனவே நெல் நாற்று பாவி நாற்றுகளை தயார் நிலையில் வைத்துள்ளனர். தற்போது அந்த விவசாயிகளும் நெல் நடவு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

**-ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share