பூண்டி ஏரி நிரம்பி உபரிநீர் இன்று (டிசம்பர் 12) திறக்கப்பட்டுள்ளதை அடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியில் கனமழை காரணமாக தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதன் மொத்த கொள்ளளவான 35 அடியில் தற்போது 34.05 அடியை எட்டியது.
ஏரிக்கு நீர் வரத்து 3,500 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், வினாடிக்கு 1000 கன அடிநீர் உபரி நீராக இன்று மதியம் திறந்துவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படவுள்ளது.
பூண்டி ஏரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, கொசஸ்தலை ஆறு கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, எறையூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், சீமாவரம், இடையான்சாவடி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் இன்று விடப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், “சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் பூண்டியில் நீர் வரத்து உயர்ந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் விநாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே அங்கு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சரித்திரதிண்ட ஏடுகளில் தங்க லிபிகளில்… வைக்கத்தில் ஸ்டாலின் பெருமிதம்!