கனமழை காரணமாக மும்பை மெட்ரோ ரயில் நிலையம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. water lodged in mumbai metro
இந்தியாவில் இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்கியிருக்கிறது. கேரளா, மும்பை, தமிழகத்தில் கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கனமழை கொட்டி வருவதால் விமான போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து முடங்கியிருக்கிறது. மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளாக உள்ள குர்லா, சியான், தாதர், பரேல் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
இந்தநிலையில், கனமழை காரணமாக மும்பையின் ஆச்சார்யா ஆத்ரே சௌக் மெட்ரோ நிலையத்திற்குள் மழை நீர் புகுந்தது. மெட்ரோ ரயில் நிலைய சீலிங்கில் இருந்தும் மழைநீர் அருவி போல் கொட்டியது.
இதனால் மெட்ரோ ரயில் பிளாட்பார்ம் மற்றும் தண்டவாளத்தில் கூட தண்ணீர் தேங்கி நின்றது. இதன்காரணமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டிருப்பதாக மும்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மும்பையில் மூன்றாவது மெட்ரோ ரயில் தடம் பூமிக்கு அடியில் ஆரே காலனியில் இருந்து ஒர்லி வரை பயன்பாட்டில் இருக்கிறது. இம்மாதம் 10ஆம் தேதிதான் மெட்ரோ ரயில் தடம் ஒர்லி வரை நீட்டிக்கப்பட்டது. அவசர அவசரமாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையத்தில் தற்போது பாதுகாப்பற்ற வகையில் தண்ணீர் ஒழுகுவதும், மழை நீர் புகுந்திருப்பதும் பயணிகளைடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.