ஆந்திர முதல்வர் பாலாறு நீர்த்தேக்கத்தின் உயரத்தை அதிகரிக்காமல், தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க இருப்பதால், தமிழக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அணிமிகனிபள்ளே என்ற இடத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று (செப்டம்பர் 23) நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்றார். இதில் நடிகை ரோஜா உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையில் கனக நாச்சியம்மன் கோயில் அருகே இருக்கும் பாலாறு நீர்த்தேக்கத்தின் உயரத்தை அதிகரிக்காமல், தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க இருக்கிறோம். அதற்காக, ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
இந்த நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்படும் தண்ணீரின் அளவை அதிகரிக்கும் வகையில் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். குடிப்பள்ளியில் 77 டிஎம்சியும், சாந்திபுரத்தில் 3 டிஎம்சி தண்ணீரும் சேமிக்க 2 நீர்த்தேக்கங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு நீர்த்தேக்கங்களையும் கட்ட ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார். ஆந்திர மாநில முதல்வரின் இந்த அறிவிப்பால், தமிழக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கர்நாடகாவின் நந்தி துர்கம் என்ற மலையில் உற்பத்தியாகும் பாலாறு, 60 மைல் பாய்ந்து ஆந்திர மாநிலம், குப்பம் மாவட்டத்தில் நுழைந்து 30 மைல்கள் ஓடி, தமிழகத்தின் எல்லையான வாணியம்பாடி அருகேயுள்ள புல்லூரில் தடம் பதிக்கிறது. அங்கிருந்து வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக 140 மைல்கள் ஓடி, கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் கலக்கிறது. ஆண்டுதோறும் பாலாற்றில் குறைந்தபட்சம் 80 டிஎம்சி தண்ணீர் உற்பத்தியாகிறது. இதில் கர்நாடகம், ஆந்திரம் ஆகிய இரு மாநிலங்களும் தலா 20 டிஎம்சி தண்ணீரும், தமிழகம் 40 டிஎம்சி தண்ணீர் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.
ஜெ.பிரகாஷ்
”என்னென்ன செய்தேன்…எப்படி செய்தேன்”-ரவுடி எண்ணூர் தனசேகரனின் அதிர வைக்கும் வாக்கு மூலம்!