ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம்

Published On:

| By admin

கனடாவில் எல்லா சிகரெட்களிலும் எச்சரிக்கை வாசகம் பதிவு செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது வருகிற 2023ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வருகிறது. சிகரெட் பாக்கெட் மீது ஏற்கனவே வசனங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அதனை புறந்தள்ளிவிட்டு எல்லோரும் சிகரெட் புகைக்கிறார்கள். ஆகையால் மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகத்தை பதிவு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

சமூக சூழ்நிலைகளால் தான் பல இளைஞர்கள் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை கையில் எடுக்கின்றனர். ஒரு தடவை தானே என்று சிகரெட் பாக்கெட்டில் இருக்கும் எச்சரிக்கை வாசகத்தை புறந்தள்ளிவிட்டு அவர்கள் சிகரெட் புகைக்க ஆரம்பிக்கிறார்கள். அது நாளடைவில் ஒரு பழக்கமாக மாறி விடுகிறது. புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்துமே பல பேர் புகை பிடித்து வருகிறார்கள். ஆகையால் ஏதாவது புது வித விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கனடா அரசு எல்லா சிகரெட்களிலும் எச்சரிக்கை வாசகத்தை பதிவு செய்கிறது.

இதுகுறித்து கனடாவின் மனநலம் மற்றும் போதை அடிமையாதல் துறைக்கான அமைச்சர் கரோலின் பென்னட் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒவ்வொரு முறை இழுக்கும் போதும் விஷம் உள்ளே செல்கிறது என்ற வாசகத்தை தற்போது ஒப்புதலுக்காக வைத்துள்ளோம். புகைபிடிப்பதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எல்லா சிகரெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் பதிவு செய்யப்பட்டு விற்கப்படும். இந்த எச்சரிக்கையின் புதிய மாற்றத்திற்கான ஆலோசனை இன்றிலிருந்து தொடங்கப்படுகிறது. இது போன்ற புதிய முயற்சிகள் அத்தியாவசிய தகவல்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க உதவும்.” என்று கூறினார்.

இதன்மூலம் எல்லா சிகரெட்டுகளிலும் வாசகம் பதிவு செய்யும் முதல் நாடாக கனடா நாடு மாற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share