சபாஷ், சரியான போர் முழக்கம்: “இந்துவா? இந்துத்துவவாதியா?”

Published On:

| By Balaji

ராஜன் குறை

ஒரு திரைப்பட வசனம் தமிழில் அனைவரும் அறிந்தது… “லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவேன்” என்பது. லேட்டா வருவது என்பது தாமதமாக வருவது. லேட்டஸ்டா வருவது என்பது திருத்திய, மேம்பட்ட வடிவில் வருவது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்த போர் முழக்கம் நிச்சயம் லேட் – தாமதம் என்பதில் ஐயமில்லை. இந்த வித்தியாசம்தான் காந்தியத்தின் அடி நாதம். இடைப்பட்ட காலத்தில் மதச்சார்பின்மை குறித்த தவறான புரிதல்களால் இந்து மதம் என்பதையே, இந்துத்துவவாதிகள் தங்களுடைய தனிச்சொத்தாக பாவிக்கும் நிலை ஏற்பட்டது. அதன் மூலம் பெரும்பான்மைவாத மொழியைப் பயன்படுத்தி இந்துத்துவ பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததுடன் ஒரு பாசிச கலாச்சாரத்தை, அரசியலை முன்னெடுப்பதிலும் முனைந்துள்ளது. அதை முறியடிக்க இப்போது லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக இந்து என்ற இறை வழிபாடு மற்றும் சடங்கு சார்ந்த வெகுஜன நம்பிக்கைகளுக்கும், இந்துத்துவம் என்ற நவீன அரசியல் கோட்பாட்டுக்கும் உள்ள தீவிர முரண்பாட்டை ராகுல் காந்தி கையில் எடுத்துள்ளது மிக முக்கியமானதாகும்.

ராகுல் காந்தி விரிவான கோட்பாட்டு விளக்கங்களுக்குள் ஒரு பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் செல்ல முடியாது. எனவே அவர் ரத்தின சுருக்கமாக இந்து என்பதற்கும், இந்துத்துவா என்பதற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கியுள்ளார். இந்து என்றால் காந்தி; இந்துத்துவா என்றால் கோட்சே.

இது மிகத் துல்லியமான, அனைவரும் புரிந்துகொள்ளக் கூடிய விளக்கம். இந்த தருணத்தில் இந்திய அரசியலுக்கு மிக, மிக தேவையான விளக்கம். ஏனெனில் கோட்சேவின் வாரிசுகள் ஒன்றிய அரசைக் கைப்பற்றி இருப்பதுடன் முழுமையாக கோட்சே-சாவர்க்கரின் பாசிசக் கனவை, மீண்டும் பார்ப்பனீய இந்து அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன வல்லரசை உருவாக்க முனைந்துள்ளனர். ஆனால் இரண்டு கேள்விகள் உடனடியாக எல்லோர் மனதிலும் எழும்: 1) மதச்சார்பின்மையை இது பாதிக்காதா?; 2) ஜாதீயம் போன்ற இந்து மதத்தின் பிரச்சினைகளையும் ஏற்றுக்கொள்வதில் முடியாதா?

**மதச்சார்பின்மை என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?**

மதச்சார்பின்மை என்பதற்கு அரசு ஒரு மதத்துக்கு ஆதரவு அளித்து, மற்றொரு மதத்தை ஒடுக்கக் கூடாது என்பது அடிப்படை வரையறை. இதுவே மிக முக்கியமானது. ஆனால் சுதந்திரவாத சிந்தனை மற்றொரு சட்டகத்தையும் உருவாக்குகிறது. அது என்னவென்றால் குடி நபர், தனி நபர் என்று ஒவ்வொருவரையுமே இரண்டாகப் பிளக்கும் சுதந்திரவாத அணுகுமுறை. அதன்படி தனி நபராக நான் ஒரு மத நம்பிக்கையைப் பின்பற்றலாம். ஆனால் குடி நபராக நான் பொதுவான விதிமுறைகளையே பின்பற்ற வேண்டும். இந்தப் பிரிவினை மிகப்பெரிய குழப்பங்களுக்கு இட்டுச் சென்றது என்பதுதான் உண்மை. அதன் விளைவாக பொதுவெளியில் மதச்சின்னங்களை அணியலாமா (திருநீறு, நாமம், குல்லா, டர்பன், பர்தா இன்னபிற), மதரீதியான நடைமுறைகளுக்கு பொது சட்டத்தில் அங்கீகாரம் கேட்கலாமா (தேவதாசி கலாச்சாரம், பால்ய விவாகம், முத்தலாக் இன்னபிற), எந்த அளவு மதம் வைக்கும் மரபு குறித்த கோரிக்கைகளை அனுமதிக்கலாம், எங்கே பொதுவான சட்டங்களை அனுமதிக்க வேண்டும் எனப் பல கேள்விகள் தோன்றுகின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இதுகுறித்து ஏராளமான சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள் பல முக்கிய நூல்களை எழுதியுள்ளார்கள். சர்வதேச அளவில் சார்ல்ஸ் டைலர், தலால் அசாத், வில்லியம் கனோலி என சில முக்கியமான பெயர்களை நான் குறிப்பிடுவேன். இந்திய அளவில் அஷிஸ் நந்தி, பார்த்தா சாட்டர்ஜி, ராஜீவ் பர்கவா உள்ளிட்ட பலர் முக்கியமான இடையீடுகளை செய்துள்ளார்கள். இவர்களில் பலரும் சுதந்திரவாதத் தீர்வு என்பது போதுமானது இல்லை என்று ஏற்றுக்கொள்பவர்கள்.

சர்வதேச அளவில் ஃபிரெஞ்சு தத்துவவாதி ஃபூக்கோ இரானில் அயதுல்லா கொமெனி புரட்சியை (1979) ஆதரித்துப் பேசியது போன்றவை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. தொடர்ந்து பன்மைத்துவ கலாச்சார கோட்பாடுகள் (Multi-culturalism) முக்கியத்துவம் பெறத் துவங்கின. சுதந்திரவாதம் பெரும்பான்மையின் தனி வாழ்க்கைக்கு பொது வாழ்க்கையில் அதிக சலுகை கொடுப்பதும், சிறுபான்மையினரின் தனி வாழ்க்கை கேள்விக்கு உள்ளாவதும் ஒரு முக்கிய பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது. இதற்கு எதிர் நிலையில் பாசிச சக்திகள் சிறுபான்மையினருக்கு அதிக சலுகையா, இது போலி மதச்சார்பின்மை என கோஷம் எழுப்பத் தொடங்கின. இந்தப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் இந்தக் கட்டுரையில் விவாதிக்க முடியாது. அவற்றையெல்லாம் பொது மன்றத்தில் தொடர்ந்து விவாதித்துதான் புதிய தீர்வுகளை காண முடியும். ஆனால் இந்த தனி நபர் / குடி நபர் எல்லைக்கோட்டு பிரச்சினையையும், அரசு ஒரு மதத்தின் சார்பாக இயங்கக் கூடாது என்ற அடிப்படையையும் குழப்பிக் கொள்வது ஆபத்தானது. பாசிசம் அந்த எல்லைக்கோட்டை அழிக்கவே தொடர்ந்து முயற்சி செய்யும்.

உதாரணமாக பாரதீய ஜனதா அரசு செய்த மூன்று விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 1) குடியுரிமை சீர்திருத்தச் சட்டம் என்ற பெயரில் குடியுரிமையை மத அடையாளம் சார்ந்து வேறுபடுத்த முனைந்துள்ளது; இது முஸ்லிம்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றும் இந்துத்துவ வேலை திட்டத்தின் பகுதி. தங்கள் புனிதத்தலங்களை புண்ணிய பூமியான இந்தியாவுக்கு வெளியே காண்பவர்கள் இந்திய குடிமக்கள் அல்ல என்பதையே இந்துத்துவத்தின் அடிப்படையாக சாவர்க்கர் கூறினார்; 2) அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடியே ஒரு பூசாரியைப்போல கலந்துகொண்டார். இது அரசின் மதச்சார்பின்மையை குழிதோண்டி புதைத்தது; 3) காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தபோது அதற்கு வாக்களித்த தனி உரிமைகளை நீக்கியதுடன், அதன் மாநில தகுதியையே பறித்து, மூன்று ஒன்றிய ஆட்சி பிரதேசங்களாக மாற்றியது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் முஸ்லிம் குடிமக்களின் அன்றாட வாழ்வை அங்கே குவிந்துள்ள ராணுவம் கட்டுப்படுத்தும் பயங்கர சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் இந்திய அரசை இந்துத்துவ அரசாக அதாவது இந்துக்களே முதன்மை குடிமக்கள், முஸ்லிம்கள் இரண்டாம்தர குடிமக்கள் அல்லது குடியுரிமை அற்றவர்கள் என்ற லட்சியத்தை நோக்கியே பாரதீய ஜனதா கொண்டு செல்கிறது என்ற எண்ணம் தவிர்க்க முடியாதது.

**பார்ப்பனீய இந்துமதமும், பார்ப்பனீய எதிர்ப்பு மரபுகளும்**

இந்து மதம் ஒரு தொகை மதம் என்றுதான் இந்துத்துவவாதி தொடங்குவார். அது எதன் அடிப்படையில் தொகுக்கப்பட்டது என்பதுதான் கேள்வியே. இந்தத் தொகுப்பின் முதல் அடித்தளம் வேதங்களில் பாடப்பட்ட ஆரியக்கடவுள்களை பூர்வகுடிகளின் கடவுளர்களுடன் இணைத்து புராணங்களை உருவாக்கியது. ராக்‌ஷசர்கள் என்னும் அரக்கர்கள், அசுரர்கள் எனப்படுவோர் பூர்வகுடிகளே என்பதே பல ஆய்வாளர்களின் சிந்தனையாக உள்ளது. ஆரியர்களுக்கும், ஆரியர் அல்லாத பூர்வகுடிக்களுக்குமான முரண்களே புராண கற்பனைகளின் அடிப்படை என்பதே பொதுக்கருத்து. இன்றளவும் அரக்கர்களும், அசுரர்களும் பல்வேறு மக்கள் தொகுதிகளால் வழிபடப்படுகின்றனர். ஒரு முக்கியமான உதாரணம் கேரள மாநிலத்தின் ஓணம் திருநாள். இது மாபலி என்ற அசுர மன்னனின் மறுவருகையைக் கொண்டாடும் தினமாக விளங்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தத் தினத்தை மாபலியை தந்திரமாகக் கொன்ற வாமனனைக் கொண்டாடும் தினமாகக் கூறி வாமன ஜெயந்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார். கேரள மக்கள் அதை முற்றிலும் நிராகரித்தனர். ராவணன், இரணியன் போன்ற அசுர மன்னர்களும் தீயவர்கள் என்பது புராண கற்பனையாகவே உள்ளது. பாரதிதாசன் இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்று மாற்றுக் கதையாடலை எழுதினார். புலவர் குழந்தை ராவண காவியம் இயற்றியுள்ளார்.

இதற்கடுத்த நிலையில் தொகுப்பு ஜாதிப்படி நிலை என்ற சமூக அமைப்பினால் நிகழ்ந்தது. வர்ண தர்ம பிரிவினை என்பதை பார்ப்பனர்கள் பல்வேறு அரசர்களுடன் இணைந்து நடைமுறைப்படுத்தினர். பார்ப்பனர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நால்வர்ண பிரிவினை பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு ஒவ்வொரு வர்ணத்தினரின் சமூக இடம் வரையறுக்கப்பட்டது. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட புராண, இதிகாசங்களைத் தவிர ஏராளமான தர்ம சாஸ்திர நூல்கள் இந்தப் பிரிவினையை விளக்கி எழுதப்பட்டன. பஞ்சமர்கள் என்ற மக்கள் நால்வர்ணத்தினருக்கும் கீழ்படியில் வைக்கப்பட்டு, பல்வேறு சேவைகளுக்கென்று அடையாளப்படுத்தப்பட்டனர். இந்தப் பிரிவினைகள் எல்லாம் இந்தியா முழுவதும் பல்வேறு அரசுருவாக்கங்களில் எல்லா காலங்களிலும் ஒன்றுபோல இருந்ததாகக் கூற முடியாது. ஆனால் காலனீய ஆட்சிக்காலத்தில் இந்த நடைமுறைகளும், தர்ம சாஸ்திரங்களும் தொகுக்கப்பட்டு பொதுவிதிகளாக சட்டங்களாகப் பின்பற்றப்படத் துவங்கின.

மூன்றாவதாக கோயில்கள் என்பவை சமூக அரசியல் வாழ்வின் கேந்திரங்களாக அமைந்திருந்தன. வெவ்வேறு அரசர்கள் வெவ்வேறு தெய்வங்களின் கோயில்களுக்கு முன்னுரிமை அளித்தாலும், போர்களின்போது எதிரி நாட்டு கோயில்களை சூறையாடி அழித்தாலும், கோயில்களும், பூசாரி வர்க்கமும் அரசதிகாரத்துடன் நெருங்கிய தொடர்புடன் இருந்துவந்தன. இவையும் காலனீய ஆட்சிக்காலத்தில் திட்டவட்டமான சட்டங்கள் உருவாக்கப்பட்டு நிலைபடுத்தப்பட்டன.

இப்படியான பார்ப்பனீய, அரசதிகாரத்துடன் பிணைந்த பூசாரி வர்க்க ஆதிக்கம் மட்டுமே மதமாக இருக்கவில்லை. இதற்கு எதிராகவும், மறுப்பாகவும் பல்வேறு மகான்கள் உருவானார்கள். அவர்கள் பூசாரி வர்க்கத்தைத் தவிர்த்த வெகுமக்களின் பக்தியையும், அவர்களிடையே சமத்துவத்தையும், தற்சார்புள்ள ஆன்மிக தரிசனத்தையும் வலியுறுத்தினார்கள் (“நட்ட கல்லும் பேசுமோ, நாதனுள்ளிருக்கையில்”). அதனால் இந்து மதத்தினுள் தொடர்ந்து ஆதிக்க மறுப்பு வெகுஜன இயக்கங்களும் தொடர்ந்து நிலவி வந்தன. பசவர், அக்கம்மா தேவி ஆகியோரின் வசனங்கள், ராமானுஜரின் ஜாதி படி நிலை தகர்ப்பு, சித்தர்களின் புரட்சிகர ஆன்மிகம் என எத்தனையோ தனித்துவமிக்க தத்துவ, வழிபாட்டு மரபுகளை பார்ப்பனீயம் என்ற மிகப்பெரிய கோணியில் அள்ளிப்போட்டு கட்டிதான் இந்து மதம் என்ற ஒற்றை வரலாற்று மதமும், அதன் பார்ப்பனீய இறையாண்மை அடித்தளத்தின் மீது இந்துத்துவம் என்ற அரசியல் கோட்பாடும் கட்டப்படுகிறது.

பாரதீய ஜனதா கட்சி இப்படியான பார்ப்பனீய ஜாதியாதிக்க இந்து அடையாளத்தினை அடிப்படையாகக் கொண்டது என்பதை புரிந்துகொள்வது கடினமல்ல. ஆதிக்க ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு அளித்து இட ஒதுக்கீடு தத்துவத்தைப் பாழ்படுத்தியது. பொருளாதாரத்தை கார்ப்பரேட் மயமாக்கி அரசுத்துறையையும், மாநில அரசுகளையும் பலவீனப்படுத்துவதன் மூலம் மீண்டும் ஜாதீய ஏற்றத்தாழ்வை அதிகரிக்க முனைந்துள்ளது. ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் என்று நிறுவுவது, கல்வியை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து மீட்புவாத சிந்தனைகளைப் பரப்புவது, சமஸ்கிருதத்தை வலுப்படுத்தி பார்ப்பனீய மீட்பு வாதத்தை முன்னெடுப்பது ஆகிய வேலைத்திட்டங்களையும் பாரதீய ஜனதா கட்சி முழு மூச்சாக செயல்படுத்த முனைந்துள்ளது.

காங்கிரஸ் இந்த அம்சத்தில் தன் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். இந்துத்துவாவின் அடித்தளமான பார்ப்பனீயத்தை நிராகரிக்க முன்வர வேண்டும். ராகுல் காந்தி மாபலி பக்கமா, வாமனன் பக்கமா என்பதை உரத்துக் கூற வேண்டும். இந்து மதத்தின் பன்மையை மீட்டெடுத்து வர்ண தர்மத்தை அழித்தொழிக்க முன்வர வேண்டும். அதைச் செய்யாமல் இந்துவையும், இந்துத்துவத்தையும் வேறுபடுத்துவது முழு பலன்களைத் தராது.

**ராகுல் காந்தி சொல்வது புதிதா?**

காங்கிரஸ் தலைவராக இந்த போர் முழக்கத்தை ராகுல் காந்தி வைப்பது புதிது எனலாம். ஆனால் பார்ப்பனீயத்தையும், இந்து மரபுகளையும் வேறுபடுத்தி புரிந்துகொள்வது என்பது பழையதுதான். காந்தியிடம் இதைக் காணலாம். நேருவிடம் காணலாம். ஆனால், அவர்கள் பார்ப்பனீயத்தை போதுமான அளவு கடுமையாக விமர்சிக்கவில்லை என்பதுதான் பிரச்சினை. திராவிட முன்னேற்றக் கழகம் இதில் மிகுந்த முதிர்ச்சியைக் காட்டியது. சைவ சித்தாந்த மூலவரான திருமூலரிடமிருந்து “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற வரியை எடுத்து அதை கட்சியின் மதம் சார்ந்த கோட்பாடாக்கினார் அண்ணா. அதன் பொருள் எவ்வளவு அடையாளங்கள் இருந்தாலும் மனித குலம் ஒன்று என்பதும், அந்த மனித குலத்துக்கு மூலாதாரமான சக்தியும் ஒன்றுதான் என்பதுமாகும். கலைஞர் “கோயில்கள் கூடாது என்பதல்ல; அது கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது” என்ற தன் புகழ்பெற்ற பராசக்தி திரைப்பட வசனத்தில் கட்சியின் கோட்பாட்டு அடிப்படையை உணர்த்தினார். தன் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் பாரதீய ஜனதா ஆட்சி ஒன்றியத்தில் அமைந்த பிறகு, தனது கலைஞர் தொலைக்காட்சியில் ராமானுஜர் குறித்த தொடருக்கு கதை வசனம் எழுதி ஒளிபரப்பச் செய்தார். ஜாதியாதிக்கத்தை ராமானுஜர் விமர்சித்ததை இந்துத்துவத்தின் முன்னால் வைத்து பார்ப்பனீய மீட்புவாதத்துக்கு சவால் விட்டார். கடவுள் மறுப்பை பெரிதும் வலியுறுத்திய பெரியாரும் கூட, குன்றக்குடி அடிகளாருடன் மேடையைப் பகிர்ந்துகொண்டார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதை தனது இறுதி ஆசையாக, நெஞ்சில் தைத்த முள்ளாக கூறினார். நாத்திகமே ஒற்றை இறுதி இலக்கென்று நினைத்தால் எதனால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று கூறப் போகிறார்? எனவே இந்து என்பது வேறு, இந்துத்துவம் என்பது வேறு. இந்து என்பதன் அடிப்படை பார்ப்பன பூசாரி வர்க்கம் தவிர்த்த வெகுஜன இறையுணர்வு. இந்துத்துவம் என்பதன் அடிப்படை பார்ப்பனீய இறையாண்மை அரசியல் கோட்பாடு. காந்தி இந்து. கோட்சே இந்துத்துவம். இதைச் சரியாக இனம் கண்ட ராகுல் காந்தி திராவிட இயக்கத்தின் பாதையில் தான் செல்வதை பார்ப்பனீய விமர்சனத்தின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

**கட்டுரையாளர் குறிப்பு:**

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com.


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share