வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று (ஆகஸ்ட் 8) தாக்கல் செய்தார்.
அப்போது இந்த மசோதாவுக்கு இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாஃபியா கையில் வக்ஃபு வாரியங்கள்!
இதனையடுத்து பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “எதிர்க்கட்சியினர் முஸ்லிம்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். நேற்று இரவு வரை வக்ஃபு வாரியங்களை மாஃபியா கைப்பற்றியிருப்பதாக பல எம்.பி-க்கள் என்னிடம் கூறினர். சில எம்.பி-க்கள் தனிப்பட்ட முறையில் இந்த மசோதாவை ஆதரிப்பதாகவும் என்னிடம் கூறியிருக்கின்றனர்.
இந்த மசோதா குறித்து நாடு தழுவிய அளவில் பல அடுக்கு ஆலோசனைகளை நடத்தியிருக்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினர்களை எந்த மதத்துடனும் தொடர்புபடுத்துவது சரியல்ல.
பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களை வக்ஃபு வாரியத்தில் உறுப்பினராக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வக்ஃபு வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால் தற்போதைய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான எம்.பி.க்கள் இந்துவாகவோ அல்லது கிறிஸ்துவராகவோ இருப்பதற்கு நாம் என்ன செய்ய முடியும்?
இந்த மசோதா மூலம், எந்த மத அமைப்பின் சுதந்திரத்திலும் தலையிட முடியாது. அரசியலமைப்பின் எந்த விதியும் மீறப்படவில்லை. யாருடைய உரிமையையும் இது பறிக்காது. இந்த மசோதா இதுவரை உரிமை பெறாதவர்கள் அதைப் பெறுவதற்காக கொண்டுவரப்பட்டிருக்கிறது” என பேசினார்.
தொடர்ந்து வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு அவர் பரிந்துரை செய்துள்ளார்.
கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது – எடப்பாடி
இந்த நிலையில் நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியுள்ளதாவது, “வக்ஃபு சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. அரசியலைமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதச்சுதந்திரத்தை மறுக்கும் வகையில் உள்ளது.
முஸ்லிம்களின் நலனுக்காக முஸ்லிம்களால் அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களை அவர்களிடம் இருந்து பறித்து அரசு நிர்வகிக்க நினைப்பது தவறானது. மட்டுமின்றி, வக்ஃபு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களையும் அதனை நிர்வகிக்க ஒப்புதல் அளிக்கும் திருத்தம் ஏற்புடையதல்ல.
வக்ஃபு சொத்துகள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் மாநில அரசின் பணிகளை பறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்வது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.
ஆகவே, மதச்சிறுபான்மையினருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை பறிக்கும் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Paris Olympic : மீண்டும் வெண்கலம்… 52 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கி சாதனை!