12 மணி நேரம் விவாதம்… மக்களவையில் வக்ஃப் மசோதா நிறைவேற்றம்!

Published On:

| By Selvam

12 மணி நேர விவாதத்திற்கு பிறகு, மக்களவையில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. waqf bill passed parliament

வக்ஃப் வாரிய சொத்துக்களை முறைப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக, புதிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று ( ஏப்ரல் 2) தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அவர், “வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். இந்த மசோதா முஸ்லிம் சொத்துக்களுடன் மட்டுமே தொடர்புடையது, மதத்துடன் அல்ல.

இந்த சட்ட திருத்தத்தை நாம் அறிமுகப்படுத்தவில்லை என்றால், நாம் அமர்ந்திருக்கும் நாடாளுமன்றக் கட்டிடம் கூட வக்ஃப் சொத்தாக மாற்றப்பட்டிருக்கும். நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வராவிட்டால், பல சொத்துக்கள் வக்ஃப் வாரியத்திற்கு மாற்றப்பட்டிருக்கும்” என்றார்.

இதற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

மேலும், 12 மணி நேரத்திற்கு மேலாக, வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மின்னணு தானியங்கி வாக்கு பதிவு முறையைப் பயன்படுத்தி வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 288 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 232 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராகவும் வாக்களித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகு மக்களவையில் பேசிய கிரண் ரிஜிஜு, “கோடிக்கணக்கான ஏழை முஸ்லிம்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பார்கள். இந்த மசோதா மீது பதிலளித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி.

வக்ஃப் மசோதா சட்டவிரோதமானது என்று இங்கே பேசிய எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். பின்னர் ஏன் உச்சநீதிமன்றம் இந்த சட்டத்திருத்தத்தை தடை செய்யவில்லை? சட்டவிரோதம் என்ற வார்த்தையை இனிமேல் பயன்படுத்தாதீர்கள்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share