மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையான ராஜ்யசபாவிலும் வக்ஃப் மசோதா இன்று (ஏப்ரல் 4) அதிகாலை நிறைவேற்றப்பட்டது. Waqf Bill: AIADMK, PMK, TMC Rajya Sabha votes
128 உறுப்பினர்கள் ஆதரிக்க, 95 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சிவசேனா (யுபிடி), சமாஜ்வாடி கட்சி, ஆர்ஜேடி மற்றும் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் இந்த மசோதாவை எதிர்த்தனர். இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று நள்ளிரவில் நாடாளுமன்றத்துக்கு வந்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
அவர் இதை ‘அரசியலமைப்புக்கு எதிரானது’ என்று கூறி, வக்ஃப் சொத்துக்கள் மீதான முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிப்பதை நோக்கமாகக் கொண்டதாகக் கூறினார்.
தமிழ்நாட்டில் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் ஜி.கே.வாசன் இந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்தார். அதேநேரம் பாமக தலைவரும் எம்பியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்துவிட்டார்.
பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என்று பேசப்படுகிற நிலையில், ராஜ்யசபாவில் நான்கு இடங்களை வைத்துள்ள அதிமுக இந்த மசோதாவில் என்ன நிலை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து நேற்று மின்னம்பலத்தில், வக்ஃப் சட்ட மசோதா: ராஜ்யசபாவில் அதிமுக நிலைப்பாடு என்ன? மாலை வரை ஆலோசித்த எடப்பாடி என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அதிமுக சார்பில் விவாதத்தில் பேசிய மூத்த உறுப்பினர் தம்பிதுரை இரு நிமிடங்கள்தான் பேசினார்.
“அரசு வக்ஃப் வாரியத்தை மாற்றியமைக்கும் வகையில் இந்த மசோதாவை கொண்டுவருகிறது. சிறுபான்மையின மக்களின் நலன் மீது அதிமுக மிகவும் அக்கறை கொண்டுள்ளது. முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளனர். இந்தியாவில் குறிப்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அதிமுக கவனமாக இருக்கிறது. எனவே அதிமுகவின் கோரிக்கையை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். Waqf Bill: AIADMK, PMK, TMC Rajya Sabha votes
இந்நிலையில் வாக்கெடுப்பில் அதிமுக உறுப்பினர்கள் இந்த மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர்.
கடந்த வாரம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மத்திய அரசின் வக்ஃப் சட்டத் திருத்தத்தை எதிர்த்து முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுகவும் ஆதரித்திருந்தது குறிப்பிடத் தக்கது.