ஆதரவு 128, எதிர்ப்பு 95… ராஜ்யசபாவில் நிறைவேறியது வக்ஃப் மசோதா – அதிமுக நிலை என்ன?

Published On:

| By Selvam

மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்ஃப் சட்டத்திருத்த மசோதா இன்று (ஏப்ரல் 4) அதிகாலை நிறைவேறியது. waqf amendment bill passed

வக்ஃப் வாரிய சொத்துக்களை முறைப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக புதிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் ஏப்ரல் 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தினார்.

12 மணி நேர விவாதத்திற்கு பிறகு இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 288 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 232 உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராகவும் வாக்களித்தனர். இதனால் வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து மாநிலங்களவையில் வக்ஃப் மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று (ஏப்ரல் 3) மதியம் தாக்கல் செய்தார்.

மாநிலங்களவையை பொறுத்தவரை, தற்போது 236 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். வக்ஃப் மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென்றால் அதற்கு 119 உறுப்பினர்கள் ஆதரவு தேவை.

பாஜகவில் 98 ராஜ்யசபா உறுப்பினர்கள், கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ராஷ்டிரிய  லோக் தள் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து மொத்தம் 122 இடங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உள்ளன. 

அதிமுகவுக்கு நான்கு ராஜ்யசபா உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே வக்பு சட்ட திருத்த மசோதாவில் அதிமுக உறுப்பினர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது.

இந்தநிலையில், அதிமுக எம்.பி தம்பிதுரை இந்த மசோதா குறித்து பேசும்போது,

“சிறுபான்மையின இஸ்லாமிய மக்களின் நலன் மீது அதிமுக மிகவும் அக்கறை கொண்டுள்ளது. முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே அதிமுகவின் கோரிக்கையை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக பேசினர். இந்த மசோதா மீது 14 மணி நேரம் விவாதம் நடைபெற்றது.

அதிகாலை 2.30 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 128 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 95 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. waqf amendment bill passed

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share