வக்ஃப் சட்டத்திருத்த மசோதா அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று மனுதாரர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று (மே 20) வாதிடப்பட்டது.
நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பி-யுமான ஆ.ராசா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஏஐஎம்ஐஎம் எம்பி அசாதுதீன் ஒவைசி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் என சுமார் 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. Waqf amendment bill is unconstitutional
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு, வக்ஃப் சட்டத்தை செயல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்தது.
இந்தநிலையில், புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி மசிஹ் தலைமையிலான அமர்வில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி,
“எந்தவொரு விதியும் பின்பற்றப்படாமல் வக்ஃப் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் வகையில் இந்த சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஐந்து வருடங்களாவது இஸ்லாம் மதத்தை கடைப்பிடிக்கும் ஒருவர் மட்டுமே வக்ஃப் சொத்தை தானமாக வழங்க முடியும் என்று சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு முஸ்லீம் மரணப் படுக்கையில் இருக்கும்போது வக்ஃப் சொத்தை கொடுக்க விரும்பினால், அவர் ஒரு முஸ்லீம் என்பதை நிரூபிக்க வேண்டும். இது அரசியலமைப்பிற்கு விரோதமானது.
நமது அரசியலமைப்பின் கீழ், அரசு மத நிறுவனங்களில் தலையிட முடியாது. இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் ஒரு நினைவுச்சின்னம் பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவுடன், அதன் வக்ஃப் அந்தஸ்தை இழக்கும். இதில் சம்பல், ஜமா மசூதி உள்ளிட்டவை அடங்கும்.
ஒரு முஸ்லிம் தனது சொத்தை வக்ஃப்பாக அர்ப்பணிக்க தான் ஒரு முஸ்லிம் என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளது. மேலும், ஒரு சொத்து வக்ஃபா அல்லது அரசாங்க சொத்தா என்பதை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்கிறார். இதனால் முஸ்லிம்கள் ஈடு செய்ய முடியாத இழப்பை சந்திக்கின்றனர்” என்ற வாதத்தை முன்வைத்தனர்.
இதனையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு (மே 21) ஒத்திவைத்தனர்.
