வக்ஃப் சட்ட மசோதா: ராஜ்யசபாவில் அதிமுக நிலைப்பாடு என்ன? மாலை வரை ஆலோசித்த எடப்பாடி

Published On:

| By Aara

ஏப்ரல் 2 ஆம் தேதி நள்ளிரவு தாண்டியும் விவாதம் நடத்தி, மக்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா 288 உறுப்பினர்கள் ஆதரவு 232 உறுப்பினர்கள் எதிர்ப்பு என்ற அளவில் பெரும்பான்மை பெற்று நிறைவேற்றப்பட்டது. Waqf amendment bill aiadmk

மக்களவையில் அதிமுகவுக்கு எந்த உறுப்பினரும் இல்லாத நிலையில், அங்கே அதிமுக இந்த மசோதாவில் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்ற கேள்வி எழவில்லை.

ஆனால், இதே வக்ஃப் சட்ட திருத்த மசோதா இன்று (ஏப்ரல் 3) ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.  இன்று இரவு ராஜ்ய சபாவில் இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ராஜ்யசபாவில் நான்கு உறுப்பினர்களை பெற்றிருக்கிற அதிமுக இதில் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்பது அரசியல் ரீதியாக மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால் கடந்த மார்ச் 25ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வந்த பிறகு, அதிமுக- பாஜக கூட்டணி உருவாவதற்கான அறிகுறிகள் வலிமையாக தென்பட தொடங்கிவிட்டன.

ராஜ்ய சபாவில் இப்போது மொத்தம்  236 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒரு சட்ட மசோதாவை இப்போது ராஜ்யசபாவில் நிறைவேற்ற வேண்டுமென்றால் அதற்கு 119 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இப்போது பாரதிய ஜனதா கட்சி 98 உறுப்பினர்களை ராஜ்யசபாவில் பெற்றிருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ராஷ்டிரிய  லோக் தள் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து மொத்தம் 122 இடங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உள்ளன. 

இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் 27, திருணமூல் காங்கிரஸ் 13, திமுக ஆம் ஆத்மி ஆகியவை தலா 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி கட்சி ஆகியவை தலா நான்கு இடங்கள், ஜே.எம்.எம். மூன்று இடங்கள், உத்தவ் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (பவார்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தலா இரண்டு இடங்கள், மதிமுக, கேரள காங்கிரஸ் மணி ஆகியவை தலா ஒரு இடம் பெற்றிருக்கிறது.

இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அக்கட்சி எம்பிக்கள் முழுமையான அளவில் ராஜ்ய சபாவில் இருப்பார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.  இது தவிர சுயேட்சை உறுப்பினர்கள் கபில் சிபல், அஜித்குமார் பூயான் ஆகியோர் இந்தியா கூட்டணியை ஆதரிப்பார்கள் என தெரிகிறது.

ராஜ்ய சபாவில் அதிமுக தற்போது நான்கு உறுப்பினர்களை பெற்றிருக்கிறது. சந்திரசேகரன், தம்பிதுரை, சி.வி. சண்முகம்,  தர்மர் ஆகியோர் அந்த நான்கு அதிமுக எம்பிக்கள் ஆவர்.  இவர்களில் தர்மர் தற்போது பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்.

எனவே வக்பு சட்ட திருத்த மசோதாவில் அதிமுக உறுப்பினர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

இவர்கள் ராஜ்ய சபாவில் வக்பு சட்ட மசோதாவை எதிர்த்து வாக்களிப்பார்களா அல்லது வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் சென்று விடுவார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

அதிமுக நிலைப்பாடு என்ன என அக்கட்சி  வட்டாரங்களில் விசாரித்த போது,

”அதிமுகவை பொறுத்தவரை கடந்த வாரம் இந்த வக்ஃப் சட்ட மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுக ஆதரித்தது.  எனவே நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை அதிமுக ஆதரித்தால் அது மிகப்பெரிய அரசியல் இரட்டை நிலையாகிவிடும்.

எனினும் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிமுக எம்பி தம்பிதுரையை நேரில் அழைத்து இது தொடர்பாக பேசியிருக்கிறார்.  நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக எம்பியான சி.வி. சண்முகம் சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வந்தன.

ராஜ்ய சபாவில் இந்த விவாதம் நடந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் அதிமுக சார்பில் தம்பிதுரை பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இந்த மசோதாவை எதிர்த்து பேச வாய்ப்பிருக்கிறது. அதே நேரம் வாக்கெடுப்பு என்று வரும்போது கலந்துகொள்ளாமல் நடுநிலை வகிக்கலாமா என்று ஆலோசனை நடந்தது.

ஆனால், அப்படி செய்தால் திமுக இதை வைத்தே மிகப்பெரிய அரசியல் செய்ய காத்திருக்கிறது.

எனவே பாரதிய ஜனதாவுக்கு இந்த மசோதாவை நிறைவேற்ற வாய்ப்பு இருக்கும் நிலையில் எதிர்த்து ஓட்டளிக்கலாமா என்ற ஆலோசனையும் தம்பிதுரை – எடப்பாடிக்கு இடையே இன்று மாலை வரை நடந்திருக்கிறது” என்கிறார்கள் ராஜ்யசபா அதிமுக வட்டாரங்களில்.

தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி என இரண்டு அணிகளிலும் இல்லாத ஒய். எஸ். ஆர். காங்கிரஸ், பிஜு ஜனதா தள், பாரத்  ராஷ்டிரிய சமிதி கட்சிகள் மட்டுமே 18 இடங்களை வைத்திருக்கின்றன. அதாவது ஜெகன் மோகனின் ஒய்.எஸ்,ஆர். காங்கிரஸ், பிஜு  ஜனதா தள் இரண்டும் தலா 7 இடங்களையும், பாரத ராஷ்டிரிய சமிதி நான்கு இடங்களையும் வைத்திருக்கின்றன.

மாயாவதி தலைமையிலான பி.எஸ்.பி. ஒரு இடத்தை ராஜ்யசபாவில் வைத்திருக்கிறது, அதிமுக இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புக்கிடையே தற்போது விவாதம் நடந்து வருகிறது.amendment bill aiadmk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share