இந்தியாவில் புதிதாக 30 விற்பனை நிலையங்களைத் துவங்க வால்மார்ட் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உலகத்தின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டின் இந்தியப் பிரிவாக ‘வால்மார்ட் இந்தியா’ உள்ளது. இந்நிறுவனம் தன்னுடைய தொழிலை இந்தியாவில் விரிவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 30 வால்மார்ட் விற்பனை நிலையங்களைத் தொடங்க வால்மார்ட் இந்தியா திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஏற்கனவே 21 நவீன மொத்த விற்பனை மையங்களை வால்மார்ட் இந்தியா அமைத்துள்ளது. அடுத்த ஆண்டுக்குள் ஐந்து முதல் ஏழு மொத்த விற்பனை நிலையங்களைத் தொடங்க வால்மார்ட் இந்தியா திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயலதிகாரியுமான கிரிஷ் ஐயர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ ஏற்கனவே 19-20 விற்பனை நிலையங்களைத் துவங்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.
ஜூலை மாதத்தில், மகாராஷ்டிராவில் புதிதாக 15 விற்பனை நிலையங்களைத் துவங்க 900 கோடி ரூபாயை வால்மார்ட் இந்தியா ஒதுக்கீடு செய்துள்ளதாக கிரிஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
