நொண்டி சாக்கு சொல்லி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்திருக்கிறார் என்று நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்தார்.
இன்று (நவம்பர் 18) நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக எம்.எல்.ஏ.க்களும், பாஜக எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து சட்டமன்றம் நிறைவடைந்த பின் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “இன்றைய விவாதத்தில் கடைசியாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் தன்னுடைய கருத்துகளை எடுத்துவைத்துவிட்டு, வெளிநடப்பு செய்வதற்காக வேண்டுமென்றே ஒரு காரணத்தை வலிந்து தேடி கண்டிபிடித்து, அதை முன்வைத்து தீர்மானம் நிறைவேறும் போது அவையில் இருக்கக் கூடாது என்பதற்காக வெளிநடப்பு செய்திருக்கிறார்.
நொண்டி சாக்கு சொல்லி வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்வதற்கு முன்பாக அவர்கள் தெரிவித்திருக்கக் கூடிய கருத்து, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் தமிழ்நாடு மீன்வள பல்கலை கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் இல்லை. அவரது பெயர் இல்லாத காரணத்தால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்” என்றனர்.
ஆனால் இது பொய் செய்தி என மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கமளித்தார்.
தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழகம் 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உருவாகி சட்டமுன்வடிவு அன்றைய ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, அது ஏற்கப்பட்டது. அது சட்டமானது.
அப்போது இந்த பல்கலை கழகத்துக்கு எந்த தலைவரது பெயரும் இல்லை. அதற்கு பின்பு 2020ஆம் ஆண்டு, டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகம் என அப்போதைய முதல்வர், தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியால் சட்டமுன் வடிவு கொண்டு வரப்பட்டது.
இந்த சட்ட முன்வடிவு 2020ல் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் இதற்கு ஒத்திசைவு தரவில்லை.
2021 வரை ஆளுநர் பரிசீலனையில் தான் வைத்திருந்தார். இந்த ஓராண்டு காலம், ஒப்புதல் பெற அதிமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திமுக ஒரு சட்டமுடிவை கொண்டு வந்தது. ஆளுநர் துணைவேந்தர்களை நியமிப்பதற்கு பதிலாக தமிழ்நாடு அரசு நியமிக்கும் என திருத்தம் கொண்டு வரப்பட்டது.
2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி சட்ட முன்வடிவு நிறைவேற்றுகிற போது, 2012ல் கொண்டு வரப்பட்ட ஒரிஜினல் சட்ட திருத்தத்தில் இருப்பது போல, அரசாங்கம் தான் துணைவேந்தர்களை நியமிக்கும் என்று தெரிவித்தோம்.
அதற்கு பிறகு, ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கிற 10 மசோதாக்களில், நாம் அனுப்பிய 2023 ஏப்ரலில் அனுப்பட்ட சட்ட முன்வடிவும், 2020ல் அதிமுக ஆட்சியில் அனுப்பிய சட்ட முன்வடிவும் அனுப்பப்பட்டது.
இன்றைய சட்டப்பேரவையில், மீண்டும் ஜெயலலிதா பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற சட்ட முன்வடிவை முதல்வர் ஸ்டாலின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காட்டாமல் அதற்கும் உயிர் கொடுத்தார்.
இதை வரவேற்கக் கூடிய கடமை உள்ள எடப்பாடி பழனிசாமி நொண்டி சாக்கை சொல்லி வெளிநடப்பு செய்திருக்கிறார். முழுக்க முழுக்க இது அரசியல்.
அதிமுகவும் பாஜகவும் இருக்கக் கூடிய ரகசிய தொடர்பு வைத்திருக்கிறது. இதனால்தான் அவை முன்னவர் துரைமுருகன், பூனை குட்டி வெளியே வந்திருக்கிறது என்று சொன்னார்” என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
‘டைம் 100’ பட்டியலில் இடம்பிடித்த 8 இந்தியர்கள்!
தாய்க்கு சொத்தில் பங்கு இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!