ஷீரடி: தமிழகத்திலிருந்து 12 சிறப்பு ரயில்கள்!

Published On:

| By Balaji

தீபாவளி பண்டிகைக்கு தமிழகத்திலிருந்து ஷீரடிக்கு 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு ஷீரடிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்களின் வசதிக்காக 12 சிறப்பு ரயில்களை இயக்குகிறது தென்னக ரயில்வே.

ADVERTISEMENT

இந்த சிறப்பு ரயில்கள் அக்டோபர் 7 ஆம் தேதி திருச்சியிலிருந்து புறப்படும். ஷீரடியிலிருந்து ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 8.25 மணிக்கு சிறப்பு ரயில்கள் புறப்படும். இந்த ரயில்கள் ஸ்ரீரங்கம், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், அரக்கோணம், திருத்தணி, புத்தூர், ரேணிகுண்டா, குண்டக்கல், அடோனி, மந்த்ராலயம் சாலை, ராய்ச்சூர், யாதகிரி, வாடி, சோலாப்பூர் மற்றும் தாவுந்த் போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகள் செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கியது எனத் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

அதேசமயம், சாய் பாபா நூற்றாண்டு விழாவையொட்டி ஷீரடிக்கு சிறப்பு ரயிலையும் தென்னக ரயில்வே இயக்குகிறது. ஷீரடி சாய் பாபா கோயிலுக்குத் தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு ரயில் வரும் 21ஆம் தேதியன்று இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை வழியாக இந்த ரயில் ஷீரடிக்குச் செல்கிறது.

ADVERTISEMENT

இந்தப் பயணம் ஏழு நாட்களுக்கு நீடிக்கும். இந்தப் பயணத்தின்போது, சாய் பாபா கோயில் மட்டுமல்லாமல் மந்த்ராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் ஆலயம், பண்டரிபுரம் உள்ளிட்ட புனித தலங்களையும் தரிசிக்கலாம். ஒரு நபருக்கு 6,615 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது பற்றிய கூடுதல் தகவலுக்கு 90031 40681, 90031 40682 என்ற எண்ணிற்கு சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தைத் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share