இந்தியாவில் வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியாவால் ஒவ்வோர் இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை இறக்கிறது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2018ஆம் ஆண்டுக்கான வயிற்றுப்போக்கு, நிமோனியா குறித்த முன்னேற்ற அறிக்கை, உலக நிமோனியா தினமான நவம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதில், இந்தியாவில் தினமும் 735 குழந்தைகள் வயிற்றுப்போக்கு, நிமோனியாவால் இறக்கின்றனர். ஒவ்வோர் இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை இறக்கிறது. 2016ஆம் ஆண்டில் 2,61,000 குழந்தைகள் ஐந்து வயதுக்கு முன்பே, இந்த நோய்களினால் இறந்துள்ளனர். இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
சர்வதேச நோய் தடுப்பு மையம், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பளூம்பெர்க் சுகாதார பள்ளி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், 2016ஆம் ஆண்டில் வயிற்றுப்போக்கு, நிமோனியாவைக் கட்டுக்குள் வைப்பதில் இந்தியா ஓரளவு வெற்றி அடைந்தது. இருப்பினும், சிகிச்சை அளிப்பதில் சற்று சரிவு காணப்பட்டது.
இந்த நோய்களைத் தடுக்க தாய்ப்பால் புகட்டுதல், தடுப்பூசி, பராமரிப்புக்கான அணுகல், நுண்ணுயிர் எதிர்ப்புகளின் பயன்பாடு, வாய்வழியே நீர்க்கரைசல் மற்றும் கூடுதல் துத்தநாகம் போன்றவற்றை நாடுகள் எவ்வாறு திறமையாக செய்கின்றன என்பதை ஆய்வு செய்வதுதான் இந்த மையத்தின் வேலையாகும்.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியாவால் இறப்பது குறைந்துள்ளதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஒவ்வோர் ஆண்டும் வயிற்றுப் போக்கால் 7.2 சதவிகிதத்தினரும், நிமோனியாவால் 6.8 சதவிகிதத்தினரும் இறந்தனர். 2000ஆம் ஆண்டில் இருந்து 2018ஆம் ஆண்டு வரை வயிற்றுப்போக்கால் இறந்தோர் எண்ணிக்கை 3,39,937இல் இருந்து 1,02,813 ஆக குறைந்துள்ளது. நிமோனியாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,85,094இல் இருந்து 1,58,176 ஆக குறைந்துள்ளது. இருப்பினும், இந்த வெற்றி போதாது.
தற்போது வயிற்றுப்போக்குள்ள குழந்தைகளில் 20% பேருக்கு மட்டும்தான் துத்தநாக மருந்துகள் கிடைக்கின்றன. ரோடோ வைரஸ் தடுப்பு மருந்து (நிமோகோகல் கான்ஜிகேட் தடுப்பூசி) ஆறு மாநிலங்களில் மட்டுமே கிடைக்கிறது.
நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் பணியில் வங்கதேசம், தன்சானியா போன்ற அண்டை நாடுகள் பெரிய அளவில் நல்ல மாற்றங்களைக் கண்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் வராமல் தடுக்கும் தற்காப்பு நடவடிக்கைகளில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது. அதற்கான சரியான சிகிச்சை முறைகளைச் செயல்படுத்துவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
