சூழலியல் செயல்பாட்டாளர் த.முருகவேள் நேர்காணல் பகுதி 2
சந்திப்பு: நரேஷ்
“நீங்கள் வாங்கும் ஒவ்வொரு புதிய செல்போனிலும் ஒரு கொரில்லாவின் ரத்தம் பதிந்திருக்கிறது.” என்று அதிர்ச்சியளித்தார் பேராசிரியர் த.முருகவேள்.
நான் அவரைச் சந்தித்து இரண்டு மணிநேரம் இருக்கும். இந்த இடைவெளியில் ஒருமுறைக்கூட அவர் தன் கைபேசியை எடுக்கவில்லை. நான் என் கைபேசியை எடுக்காமல் இருக்கவேயில்லை.
அவர் அந்த ரத்த சரித்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
“ஆப்ரிக்காவுல இருக்க ஒரு கொரில்லா இனத்தின் அழிவுக்கு நம்ம கையில இருக்க செல்போன்தான் காரணம். இந்த செல்போன் மற்றும் பிற எலெக்ட்ரானிக் பொருட்கள்ல கால்டன் என்கிற தனிமம் இருக்கும். அதுதான் சோர்ஸ் (Source). ஆப்ரிக்காவின் காங்கோ பகுதில, ஒரு கொரில்லா இனம் வசிக்குது (Highland Mountain Gorilla). அந்த இடத்துலதான் இந்த கால்டன் என்கிற தனிமம் இருக்கு. அங்க அரசாங்கம் சுரங்கம் அமைச்சு தனிமத்தை எடுக்குறது பரவாயில்ல. ஆனா ஆப்ரிக்கால இருக்க ரிபல் க்ரூப்ஸ், சட்டத்துக்குப் புறம்பான வகையில அந்தத் தனிமத்தைச் சுரண்டுறாங்க. அப்படிப்போகும்போது அங்க இருக்க கொரில்லா கூட்டத்தைச் சுட்டுத்தள்ளிடுவாங்க. ஒரு கொரில்லாகூட மிச்சம் இருக்காது. அதை ‘Bush meat’னு சொல்லப்படுற சந்தையில வித்திடுவாங்க. ஒவ்வொரு செல்போன்லையும் கொரில்லாக்களின் ரத்தம் படிஞ்சிருக்குங்கிறத நாம புரிஞ்சிக்கணும்” என்று முடித்தார்.
நான் என் கையில் இருந்த செல்போனை கீழே வைத்தேன். கைகள் சற்று நடுங்கின. அவரிடம் கேள்விகளைத் தொடுத்தேன்.
**இது தவிர்க்க முடியாத அழிவல்லவா?**
ஏன் தவிர்க்க முடியாது? நாம தேவைக்குப் பயன்படுத்துற வரைக்கும் அங்க அழிவில்ல. இன்னைக்கு நாம செல்போனைத் தேவைக்கா பயன்படுத்துறோம்? கொஞ்சம் யோசிச்சு பாருங்க. புது வெர்ஷன் வந்தா உடனே வாங்குறோம். தேவையோ இல்லையோ வாங்கிக் குவிக்கிறோம். தொலைத்தொடர்புக்குன்னு வந்ததுதான் செல்போன். இன்னைக்கு அதுல இல்லாத வசதியே இல்ல. அதை நான் தப்புன்னு சொல்லல. அதுக்கு ஒரு வரம்பு வேண்டாமா? சும்மா ஆசைக்காகவெல்லாம் நாம வாங்கிக் குவிக்கிற பொருட்கள் நேரடியா ஒரு இனத்தையே அழிச்சிருக்கு. இந்தப் புரிதல்தான் மக்கள்கிட்ட உருவாகனும். தேவையில்லாத நுகர்வைக் குறைக்கணும்.
நம்ம தேவைக்கு இங்க எல்லாமே இருக்கு. ஆனா, நம்ம ஆசைக்கும் நுகர்வுக்கும் இந்த பிரபஞ்சத்துலையே எதுவும் இல்ல.
**இது ஏன் மக்களுக்குத் தெரிவதில்லை? அவர்களுக்கு எப்படிப் புரியவைக்குறது?**
இன்னைக்கு உங்களுக்குத் தெரியாத செய்தி ஏதும் இருக்கா? வாட்ஸப்ல என்னென்னமோ செய்திகள் வருது. ஆனா இந்த மாதிரி தேவையான தகவல்கள் வர்றதில்லை. இந்தச் செய்திகளைத்தான் நாம இளைஞர்கள்கிட்டயும் மாணவர்கள்கிட்டயும் கொண்டுபோனும்.
பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கைமுறை என்பதை உதறித் தள்ளணும். அது சூழலைச் சுரண்டுவது மட்டுமில்லாம உங்களையும் சேர்த்துதான் சுரண்டுது. இதிலிருந்து மாறி இயற்கையைப் பாதிக்காத Sustainable lifestyleக்கு மாறணும்.
**எங்கிருந்து தொடங்குவது?**
நகரத்துல இருந்து ஆரம்பிப்பமே… நகரத்துல இருக்க மனிதர்கள், இந்த இடம் மனிதர்களுக்கானது மட்டுமில்லன்னு உணரணும். என்னமோ எல்லாமே நமக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கு என்கிற எண்ணத்துல நாம செயல்பட்டுக்கிட்டு இருக்கோம். இயற்கைக்கு முரணான காரியங்களைத்தான் பெரும்பான்மையான மக்கள் செஞ்சிட்டு வர்றாங்க. அதை அவங்களுக்கு புரியவைக்கணும். ஒண்ணு, புரிதல் இருப்பதில்ல, புரிதல் இருக்க இடத்துல செயல்படுவதற்கான வழிமுறைகள் தெரியுறது இல்ல. தேவையானதைத் தவிர வேற எதுவுமே வேண்டாம்னு நாம முடிவெடுக்கணும்.
இயல்பான அந்த உரையாடலில் அக்கறையும் ஆதங்கமும்தான் அதிகம் வெளிப்பட்டது. அவரின் தொடர் செயல்பாடுகளுக்கும் அதுவே காரணம். நகரங்களில் பன்மயச் சூழல் நிலைத்திருந்தால்தான் மனிதர்களால் தொடர்ந்து வாழ முடியும் என்கிறார் அவர். அது மனிதர்கள் மீதான அக்கறை என்பதைவிட நகர உயிரிகள் மீதான் காதலாகவே இருந்தது. அந்த உரையாடலில் இருந்த வீரியம், நகர வாழ்வின் தவறுகளை உணரவைத்துக் குற்றவுணர்வுக்கு ஆளாக்கியது. எனவே உரையாடலைக் கலையை நோக்கித் திருப்பினேன்.*
**உங்க காட்டுயிர் ஓவியங்கள் தத்ரூபமா இருக்கே… அதுக்கேதும் காரணம் இருக்கா?**
இது முக்கியமான கேள்வி. காட்டுயிர் ஓவியம்னா அது தத்ரூபமாத்தான் இருக்கணும். அங்க நம்ம மேதாவித்தனத்தைப் புகுத்தக் கூடாது. நாம ஒரு உயிர எப்படி பாக்குறமோ, அப்படியேத்தான் பதிவு செய்யணும். அதுதான் ஆவணப்படுத்தும். இல்லன்னா அது பெரிய பிரச்சினை ஆகிடும்.
**வரையிறதுனால என்ன பிரச்சினை ஆகும்?**
இயற்கையில ஒவ்வொரு உயிருக்கும் தனித்தன்மை இருக்கு. பறவைகளை எடுத்துக்கிட்டா எல்லாப் பறவையும் எல்லா மரத்துலையும் உக்காந்திடாது. தங்களோட இயல்புக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துதான் உட்காரும். அதுவும் கூடுகட்டும் மரத்தின் தேர்வு ரொம்ப தனித்துவமானது.
இப்போ ஒரு பறவை, மரத்துல கூடு கட்டியிருக்க மாதிரி நீங்க வரையிறீங்கனு வைங்க. அது எந்த மரத்துல கூடு கட்டிருக்கோ, அந்த மரத்தோட இலையையும் பூவையும் அப்படியே வரையணும். இல்லனா, அந்தக் குறிப்பிட்ட பறவையோட குணம் மாறுபட்டுடும். தனித்துவம் தப்பாயிடும். அங்க நம்ம கற்பனையக் காட்டக் கூடாது. அது இயற்கைக்கு முரணானது.
**அப்படி வரைதலே முரணானதா?**
ஆமாங்க. தப்பான மரத்துல தப்பான பறவையை வரையுறதும் தவறுதான. அது வரலாற்றுப் பிழையாயிடும் இல்லையா? இதுலயே மிகப்பெரிய சாதனை செய்தவர்கள் எல்லாம் இருக்காங்க. ஓ.டி.இரவீந்திரன்னு ஒருத்தர் இருந்தாரு. அவரு ஆர்கிட்ஸ் (Orchids) வரைவாரு. அதோட கலரிங் அவ்வளவு தத்ரூபமா இருக்கும். அது இன்னிக்கு ராயல் பொட்டானிக்கல் கார்டன்ல (Royal Botanical garden) இருக்கு. அரசாங்கமே அவரோட ஓவியங்களை தபால் தலைகள்ல வெளியிட்டிருக்காங்க. அவரைத் தேடிப்போய் பேசிருக்கேன். அவரு சொல்லுவாரு ‘மின்சார விளக்குகள் இருக்கும்போது வரையக் கூடாது. லைட்ஸ் யூஸ் பண்ணவே கூடாது. இயற்கையான வெளிச்சத்துலதான் வரையணும். அப்போதான் ஒரிஜினல் கலரிங் கிடைக்கும்’னு.
**இயற்கை சார்ந்த செயல்பாடுகள்னு வரும்போது, அதிலிருந்து தப்பிக்கப் பெரும்பாலும் மக்கள் சொல்லுற காரணம் நேரம் இன்மைதான். ஒரு பேராசிரியரா பணியாற்றிக்கொண்டே, இயற்கை சார்ந்த செயல்பாடுகளுக்கு எப்படி நேரம் ஒதுக்குறீங்க?**
பேராசிரியரா வேலை செய்யுறதுதான் அதுக்கு காரணம். அது ஒரு மிகப் பெரிய விஷயம். ஏன்னா, எப்பவுமே இளைஞர்கள்கூடவே இருப்பதுங்கிறதே நம்முடைய இளமையை தக்கவெச்சிக்கும். அவங்கிட்ட இயற்கை சார்ந்த வாழ்வியலைப் பத்தி பேசணும். ஏன்னா அது அவங்க எதிர்காலத்துக்குத்தான் தேவை. 100 பேர்ட்ட பேசுறோம், அதுல 10 பேர் மாறுனாலே அது மிகப் பெரிய சாதனை.
அதுவும் பொறியியல் கல்லூரில படிக்குற மாணவர்கள்கிட்ட இயற்கை சார்ந்த புரிதலை ஏற்படுத்துவது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும். நாளைக்கு ஒரு மாணவர் சிவில் எஞ்சினியரா ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கட்ட போகும்போது, அங்க EA (Environmental Assessment) ரிப்போர்ட் வாங்கனும்னு அவங்களுக்குத் தெரியணும். அந்த மாதிரி ஒவ்வொரு துறையிலையும், இயற்கை சார்ந்த அணுகுமுறையை அவங்களுக்கு கத்துக் கொடுக்கணும்.
எவ்வளவு தெரிஞ்சிக்கிட்டாலும் மக்களா மனமுவந்து மாறலைனா எதுவுமே பிரயோஜனம் இல்ல. ஒரு சின்ன உதாரணம் சொல்லுறேன்.

பங்குனி ஆமைகள் தெரியுமா? ஆலிவ் ரிட்லினு ஆங்கிலத்துல சொல்லுவோம். அவை கரைகள்ல பொரிஞ்சு கடலுக்குள்ள போகும்போது அதை பாக்குறதுக்காவே அங்க போவோம். அது மனசுக்கு அவ்ளோ இதமா இருக்கும். ஆனா, இப்போலாம் அங்க போகவே முடியல. ஏன்னா கடல் கழிவறையாவும் கரைகள் குப்பைத் தொட்டியாவும் இருக்கு. அவ்வளவு குப்பைகள்! அந்தக் குட்டிக் குட்டி ஆமைகள் அதுல சிக்கி அவஸ்தைப்படுறதைப் பாத்தா இரவு தூக்கமே வர மாட்டீங்குது. மனது அவ்வளவு கனமாகிடுது.
**இதைப் பார்த்தும் மக்கள் திருந்தலையா?**
எங்க? எது என்ன ஆனா எனக்கென்னென்னுதான் திரியுறாங்க. இந்த மாதிரி சமயங்கள்லதான் சட்டம் வேணும்னு தோணுது. எத்தனையோ தடவ ப்ளாஸ்டிக் பயன்பாடு பத்தி சொல்லிப் பாத்தோம். மக்கள் கேக்கல. இப்போ ஒரு சட்டம் போட்டவுடனே அது நடக்குது. கேக்கலைனா கேக்கவைக்கணும்.
அதுக்கும் மேல, மனசுல கொஞ்சமாவது மாற்றம் வந்தால்தான் எதாவது சாத்தியமாகும். ஃபோர்ஸ் பண்ணி எத்தனை பேர மாத்த முடியும்?
அவங்களுக்குக்காகத்தான் சொல்லுறோம். அடுத்த தலைமுறைக்காக சொல்லுறோம். தற்சார்புள்ள இயற்கை சார்ந்த வாழ்வியலுக்கு திரும்புனாத்தான் வாழ முடியும் என்ற நிலை வரும். அதுக்குள்ள மாறிடுங்க.
[நேர்காணல் பகுதி 1](https://minnambalam.com/k/2019/03/31/35)
