இத்தாலியில் நடைபெற்று வரும் 17 வயதுக்குட்பட்டோருக்கான fifa பாரிஸ் லீக்கின் நேற்றைய போட்டியில் இந்திய அணி, இத்தாலி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 4 முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற இத்தாலி அணியை இந்திய அணி வெற்றி கொள்வது இதுவே முதன்முறையாகும்.
போட்டி தொடங்கிய 31ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் அபிஜித் சர்கர் முதல் கோல் அடித்து இந்திய அணியை முன்னிலைப்படுத்தினார். அதன் பின்னர் இரண்டு அணிகளும் சமநிலையில் விளையாடி யாரும் கோல் அடிக்க முடியாமல் முதல் பாதி முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் இரண்டாம் பாதியும் தொடங்கியதிலிருந்து இரண்டு அணிகளும் சரிசமமாக விளையாடி கோல் அடிக்க முடியாமல் இருந்தனர். போட்டியின் 59 மற்றும் 75ஆவது நிமிடத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை இந்திய வீரர் அபிஜித் தவறவிட்டார். ஆனால் 80ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் ராகுல் பிரவீன் அதைப் பயன்படுத்தி மற்றொரு கோல் அடித்து அணியின் வெற்றியை மேலும் உறுதி செய்தார்.
