உதயசூரியன் சின்னத்தில் சிறுத்தைகள், மதிமுக!

Published On:

| By Balaji

திமுக கூட்டணியில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுகவுக்கு ஒரு இடமும் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மதிமுகவும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடும் அன்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து திமுக நிர்வாகிகள் மத்தியில் விசாரித்தபோது,

“விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நேற்றே பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருந்தது. ஆனால் திருமாவளவனோ தனக்கு நிகழ்ச்சிகள் இருப்பதாக சொல்லி வரவில்லை. இதற்கும் காரணம் திமுக மீது அவர் வருத்தத்தில் இருந்ததுதான். விடுதலைச் சிறுத்தைகள் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டுமென்று திமுக தரப்பிலிருந்து ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டது.

இதற்கிடையே திருமாவளவன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நேற்று தவிர்த்த தகவல் திமுக தலைவர் ஸ்டாலினுக்குத் தெரியவந்ததும் அவர் கோபமாகிவிட்டார். , ‘ஏற்கனவே நாம் அவர்களை உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்கச் சொல்லியிருக்கிறோம். அதற்கு சம்மதிக்கவில்லை எனில் ஒன்றும் பிரச்னையில்லை. அவர்கள் இல்லாமலும் கூட்டணி இருக்கும்’ என்று ஸ்டாலின் கூறியதாகத் தெரிகிறது. அதன் பின் நிர்வாகிகள் ஸ்டாலினை சமாதானப்படுத்திய பிறகே இன்று மீண்டும் விடுதலைச் சிறுத்தைகளுடான இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இன்று சிறுத்தைகளுக்கு இரு தொகுதிகளை ஒதுக்கியதோடு உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்கவேண்டும் என மீண்டும் திருமாவளவனிடம் சொல்லப்பட்டுவிட்டது. விடுதலைச் சிறுத்தை நிர்வாகிகளும் இதுகுறித்து திருமாவளவனை சமாதானப்படுத்தியிருக்கிறார்கள்” என்றனர்.

இன்று கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த திருமாவளவனிடம், தனி சின்னத்தில் போட்டியிடுவீர்களா அல்லது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவீர்களா என்ற பத்திரிகையாள்ர்களின் கேள்விக்கு, “ஏற்கனவே பல தேர்தல்களில் நாங்கள் தனிச் சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம். தற்போதுள்ள சூழலில் கூட்டணி நலன் கருதி எந்த சின்னத்தில் போட்டியிடுவது உகந்ததாக இருக்கும் என்பது தொடர்பாக நிர்வாகிகளுடன் கலந்துபேசி இரண்டொரு நாட்களில் அறிவிப்போம்” என்று பதிலளித்தார்.

இதேபோல், மதிமுகவும் உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்கும் என்றே அறிவாலயத் தகவல்கள் கூறுகின்றன. மதிமுகவில் கணேசமூர்த்திக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், வைகோவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் வழங்குவது என்று கிட்டத்தட்ட பேசி முடிக்கப்பட்டு விட்டதாம். மேலும் அந்த ஒற்றை தொகுதியிலும் மதிமுக உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது.

அண்மையில் நடந்த மதிமுக உயர் நிலைக் குழுக் கூட்டம், செயற்குழுக் கூட்டங்களில் பேசிய வைகோ, ‘மதிமுகவுக்கு அங்கீகாரம் பெறும் வகையில் திமுக கூட்டணியில் தொகுதிகள் கேட்போம். அவர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று சொல்லிவந்தார். இந்நிலையில் 27ஆண்டுகளுக்கு முன் திமுகவில் இருந்து வெளியேறிய வைகோ, மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் நிற்பதை மதிமுக தலைமை நிர்வாகிகளும் ஒரு வித நெருடலோடுதான் பார்க்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share