ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் தொடரில் இரண்டாம் நாளான இன்று (ஏப்ரல் 6) பளுதூக்குதல் போட்டியில் இந்தியா 2ஆவது தங்கம் வென்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாகத் தொடங்கிய காமன்வெல்த் தொடரில் நேற்று முதல் நாள் இந்திய அணி 2 பதக்கங்களை மொத்தமாக கைப்பற்றியது. பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு, 48 கிலோ எடைப் பிரிவில் மொத்தம் 178 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் 56 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் குருராஜா 249 கிலோ எடையை ஒட்டுமொத்தமாக தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். இதனால் முதல் நாள் முடிவில் இந்தியா மொத்தமாக இரண்டு பதக்கங்களை வென்றிருந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்று தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்தியா சார்பில் 53 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட சஞ்சிதா சானு தங்கப்பதக்கம் கைப்பற்றி உள்ளார். மொத்தமாக அவர் 192 கிலோவை தூக்கி இந்த பதக்கத்தை கைப்பற்றி உள்ளார். இதற்கு முன்னதாக 194 கிலோவை மொத்தமாக தூக்கியதே அவரது சாதனையாக இருந்தது. அதனை அவரே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சிதா சானு இதற்கு முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் இவர் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
