ஆஸ்திரேலியா VS இந்தியா: வியூகங்கள் பலிக்குமா?

Published On:

| By Balaji

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் விளையாடிய அனைத்து(7) டெஸ்ட் தொடர்களையும் கைப்பற்றி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல் ஆஸ்திரேலிய அணியும் கடந்த சில தொடர்களில் சிறப்பாக விளையாடி முதலிடத்தினை பிடிக்கும் முனைப்பில் இருக்கிறது. இப்படி பலம் வாய்ந்த இரண்டு அணிகளும் இன்று விளையாட இருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக ஆதரவு இருக்காது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மோதும் ஆஷஸ் மாதிரியான தொடர்களுக்கு மட்டும் தான் அதிக ரசிகர்கள் கண்களைக் கொடுப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் போகிற போக்கில் ஸ்கோர் அறிந்துகொள்வதும், அன்றைய நாள் முடிவில் மொத்தமாக என்ன நிலை என்பதை கேட்டறிவதுமாக இருப்பார்கள். விராட் கோலி தலைமையேற்று சிறப்பாக அணியை வழிநடத்திச்செல்லத் தொடங்கியதிலிருந்து இந்த சங்கதி மாறியிருக்கிறது. இன்று மோதவிருக்கும் இவ்விரு அணிகளும் எப்படி செயல்படப்போகின்றன என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்திய அணி 4-1 என கடும் தோல்வியை சந்தித்தது. ஆனால் தற்போது இந்திய மண்ணில் இந்த போட்டிகள் நடைபெற இருப்பதாலும், இந்திய அணி கடந்த ஆண்டிலிருந்து டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதாலும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் என நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

ADVERTISEMENT

ஆனால் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் நேற்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் **இந்திய அணி அதன் சொந்த மண்ணில் ஆதிக்கம் செய்துவருவதை தடுத்து, நாங்கள் வெற்றிபெறுவோம். இந்திய அணியில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய பந்துவீச்சாளர் அஸ்வின், அவரை எதிர்க்க நாங்கள் சிறப்பு திட்டம் வைத்துள்ளோம்** எனத் தெரிவித்தார். இதற்கு முன்னர் கடந்த வாரம் பேட்டியளித்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னரும் அஸ்வினை எதிர்கொள்ள நாங்கள் சிந்தித்து வருகிறோம் என்றே கூறினார். எனவே, இந்திய அணியில் மற்ற எந்த பந்துவீச்சாளரைப் பற்றியும் கவலையற்ற ஆஸ்திரேலிய அணி, அஸ்வின் பந்துவீச்சிற்கு மட்டும் முக்கியத்துவம் வழங்கியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்திய அணியின் கேப்டன் கோலி நேற்று அளித்த பேட்டியில் **இந்திய அணி நிச்சயம் வெற்றிபெரும்** எனக் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share