இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய ஐந்து நாடுகளுக்கு ஆறு நாட்கள் பயணம் செய்கிறார். இந்தப் பயணத்தின் முதற்கட்டமாக இன்று ஆப்கானிஸ்தான் சென்றார். அங்கே இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான ஒப்பந்தத்தில் சல்மா அணையைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்றுவந்தது. இந்த அணையை மோடி இன்று திறந்துவைத்தார். இந்த அணையின்மூலமாக 75 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் பலனடையும். 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணை புதுப்பிக்கும் பணியில் மத்திய நீர்வளம், நதிநீர் மேம்படுத்தல் மற்றும் கங்கை புத்துயிராகும் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் வேப்கோஸ் நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டது. இந்த அணை கட்டுமானப் பணியில் 1500 இந்திய மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பொறியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த அணை திறப்பு நிகழ்ச்சியில் ஆப்கானிஸ்தானின் குடியரசுத்தலைவர் அஸ்ரப் கனி வரவேற்றுப் பேசினார். ஆப்கானின் முப்பது ஆண்டுகால கனவை இந்தியா நிறைவேற்றி வைத்திருப்பதாக அவர் கூறினார். இந்தியா, ஆப்கானிஸ்தானில் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டங்களைச் செயல்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல, ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தில் உள்ள பாராளுமன்றமானது இந்திய அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்டது. இதன் மதிப்பு 969 கோடி ரூபாய் ஆகும்.
