விருத்தாசலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பக்கிரிசாமி, தனது பள்ளியை உரிய உரிமம் இல்லாமல் நடத்தி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சக்தி நகரில் வைத்தியலிங்கா நர்சரி பிரைமரி பள்ளி உள்ளது. இங்கு யூகேஜி படித்து வந்த ஆறு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த அப்பள்ளியின் தாளாளரும், திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமி, கைது செய்யப்பட்டார்.
அவரிடம் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி நள்ளிரவு முதல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் உள்ளிட்டோர் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் விசாரித்தோம்.
“பக்கிரிசாமியிடம் விசாரணை செய்த இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி மற்றும் எஸ்.பி ஆகியோரிடம் அவர் அதட்டலாக பதில் சொல்லியுள்ளார். ஆதாரம் இல்லாமல் என்னை கைது செய்யாதீர்கள். வேண்டும் என்றால் எனது பள்ளியின் சிசிடிவி கேமரா புட்டேஜை பாருங்கள் என்றார். உடனே விசாரணை அதிகாரிகளும் சிசிடிவி கேமரா புட்டேஜ்களை ஆய்வு செய்தனர். அதில் சில தகவல்கள் கிடைத்தது.
அதன் பிறகு மற்ற கோணங்களில் விசாரணை செய்த அதிகாரிகள் சிறுமியிடம் சில போட்டோக்களைக் காட்டி கேட்டபோது, ’இந்த பெரிய வாத்தியார்தான் என்னை அடிக்கடி அழைத்து இப்படியெல்லாம் பண்ணுவார். அதனால் பள்ளிக்கு போகமாட்டேன்’ என்று கூறினார்.
சிறுமியின் தாயாரிடம் விசாரித்த போது, ‘கடந்த ஒரு மாதமாகவே பிள்ளையை இப்படி கொடுமை செய்திருக்கிறார். பிள்ளையும் பள்ளிக்கு போகமாட்டேன் என்று அடம் பிடித்தது. கடைசி ஒரு வாரமாக பள்ளிக்கு போகவில்லை, தாளாளர் பக்கிரிசாமியும் அந்தப் பள்ளி ஆசிரியரும் தொடர்புகொண்டு தேர்வு நடக்கின்றது பிள்ளையை பள்ளிக்கு அனுப்பி வையுங்கள் என்றனர். அதனால் தான் ஏப்ரல் 11ஆம் தேதி பள்ளிக்கு அனுப்பி வைத்தேன், பிள்ளையும் விருப்பம் இல்லாமல் அழுதுகொண்டே போனது’ என கூறினார்.
இதையடுத்து பள்ளியில் உள்ள அனைவரிடமும் விசாரிக்க முடிவு எடுத்த எஸ்.பி பள்ளியில் பணிபுரியும் ஆறு ஆசிரியர், ஒரு ஆயாம்மா, என அனைவரையும் விடாமல் விசாரிக்க கூறினார்.
நேற்று முன்தினம் ஏப்ரல் 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரையில் டிஎஸ்பி கேம்ப் ஆபிஸில் வைத்து எஸ்.பி ராஜாராம் விசாரணை நடத்தினார்.
மேலும் சம்பவம் நடந்த நாள் அன்று விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்ற பள்ளி தாளாளர் பக்கிரிசாமி ஆறு வயது சிறுமி அட்மிட்டாகியிருக்கா என்றும் விசாரித்திருக்கிறார். இதனால் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா புட்டேஜ் காவல்துறை தரப்பில் கேட்கப்பட்டுள்ளது” என்றனர்.
அதோடு, பக்கிரிசாமி நடத்தி வந்த பள்ளி உரிய உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்ததும் விசாரணையின் போது தெரியவந்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
“பக்கிரிசாமியின் வைத்தியலிங்கா பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு 4 ஆயிரம் 5 ஆயிரம், 6 ஆயிரம் என குறைவாகத்தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது. தலைமை ஆசிரியருக்கு மட்டும் 12 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது. அதுவும் சரியான தேதியில் மாதம் மாதம் கொடுப்பதில்லை. அதைவிடக் கொடுமை அந்தப் பள்ளிக்கு 2017 முதல் லைசென்ஸ் இல்லை என்பதுதான்.
ஒரு மாவட்டத்தில் எத்தனை பள்ளிகள் உள்ளது லைசென்ஸ் இருக்கிறதா, லைசென்ஸ் ரெனிவெல் செய்துள்ளதா என்று கண்காணிக்கக் கூடிய கல்வித்துறை ஐந்து வருடமாக தூங்கிக்கொண்டு இருக்கிறதா என தெரியவில்லை” என்று கூறினர் .
விருத்தாசலம் வைத்தியலிங்கா பள்ளியைப்போல் இன்னும் எத்தனை பள்ளிகள் லைசென்ஸ் இல்லாமல் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறதோ, கவனிக்க வேண்டிய கல்வித்துறை விழிப்போடு இருக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கை.
முத்தையா முரளிதரன் பயோபிக்: விஜய் சேதுபதிக்கு பதிலாக மதுர் மிட்டல்
மதுரை: அதிகரிக்கும் தற்கொலை எண்ணிக்கை!

Comments are closed.