கடுமையாக உழைத்ததால் தான் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது என நரேந்திர மோடி இன்று (ஜூன் 7) தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியது. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய அரங்கில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் என்.டி.ஏ. கூட்டணி கட்சிகளின் அனைத்து தலைவர்களும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.
ஆலோசனை கூட்டத்தில் என்.டி.ஏ. கூட்டணியின் நாடாளுமன்றத் தலைவர் மற்றும் மக்களவைத் தலைவராக நரேந்திர மோடியினை தேர்வு செய்ய கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து மக்களவை பாஜக தலைவராகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றத் தலைவராகவும் நரேந்திர மோடி இன்று (ஜூன் 7) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாஜக தொண்டர்களுக்கு நன்றி
இதை தொடர்ந்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, “நாடாளுமன்றத் தேர்தலில் இரவு பகல் பாராமல் உழைத்த அனைத்து பாஜக தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினராக புதிதாக தேர்வாகி உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நாம் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகத்தான் தொடர்ந்து முன்னேறி கொண்டே இருக்கிறோம்.
நாடாளுமன்றத்தை பொறுத்தவரை அனைவரும் சமம். என்.டி.ஏ. கூட்டணி இந்திய மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.
பழங்குடியினர் அதிகமுள்ள 10 மாநிலங்களில் 7 மாநிலங்களில் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக எதிர்க்கட்சியினர் அனைவரும் ஈ.வி.எம். இயந்திரங்களை பற்றி தவறான கருத்துகளை வெளியிட்டனர்.
என்.டி.ஏ. கூட்டணி என்பது நல்லாட்சி
ஆனால், தற்போது மின்னணு வாக்கு இயந்திரங்களை பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. 2029ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்போது மின்னணு வாக்கு இயந்திரங்கள் குறித்த தவறான கருத்துகள் வெளிவரும். ஜனநாயக மாண்பை குறைப்பதற்காகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
தேசிய ஜனநாயக கூட்டணி என்பதன் பொருள் நல்லாட்சி என்பதாகும். வாஜ்பாய் போன்ற சிறந்த தலைவர்களின் வழி வந்தவர்கள் என்.டி.ஏ. கட்சியினர். ஏழை மக்களின் நலன் காப்பதே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நோக்கமாகும்.
காற்றுக்கூட உள்நுழைய முடியாத அளவிற்கு கூட்டணி கட்சிகளுக்குள் ஒற்றுமை இருந்தால்தான் நாட்டை வளர்ச்சி அடைய செய்ய முடியும்.
தமிழகத்தை பொறுத்தவரை கடுமையாக உழைத்ததால்தான் அங்கு பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வருங்காலங்களிலும் பாஜகவின் வளர்ச்சி அபாரமாக இருக்கும். கடுமையாக உழைத்ததால் தான் கேரளாவில் பாஜக கால்பதித்தது.
அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஒடிசாவில் பாஜக ஆட்சி
பூரி ஜெகன்நாதர் அருளால் அடுத்த 50 ஆண்டுகளுக்கும் ஒடிசாவில் பாஜகவின் ஆட்சியே தொடரும். சர்வதேச அளவில் இந்தியாவின் பிம்பத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கிறார்கள். எதிர்க்கட்சியில் இருந்தும் மக்களவைக்கு தேர்வாகி உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை விட 3வது முறையாக அதிக இடங்களை பாஜக பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியைதான் முழுமையாக நம்புகிறார்கள்.
10 ஆண்டுகளுக்கு பிறகும் காங்கிரஸ் கட்சியால் நாடாளுமன்றத் தேர்தலில் 100 இடங்களில் கூட வெல்லமுடியவில்லை. வென்றாலும், தோற்றாலும் பாஜக ஒரே மாதிரிதான் நடந்துகொள்ளும். இந்தியா கூட்டணி என்பது இப்போதும் பிளவுபட்ட வீடாகவே உள்ளது.
N-புதுமை, D-வளர்ச்சி, A-லட்சியம். இவை அனைத்தையும் உள்ளடைக்கியதே NDA கூட்டணியாகும். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் நாட்டு மக்கள் பார்த்தது டிரைலர்தான். தேர்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்தது பாஜகதான். மேலும், பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உறுதியேற்றுள்ளோம்.
உலக பொருளாதாரத்தில் 3வது இடத்திற்கு இந்தியா விரைவில் முன்னேறும். விண்வெளித்துறையில் இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் சுற்றுலாத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும்.” என மோடி தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வைரமுத்து பாடலில் பிழை… விழா மேடையில் போட்டுடைத்த விக்கிரமராஜா