உதயசங்கரன் பாடகலிங்கம்
ஒரு திரைப்படம் உருவாவதற்கான முதற் புள்ளி தொடங்கி திரையரங்கை வந்தடைவது வரை, அது சந்திக்கிற தடைகள் ஏராளம். குறிப்பிட்ட அளவிலான படங்கள் மட்டும் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான தடைகளைக் கடந்து கடைசி கட்டத்தில் தேங்கிவிடும்.
அனைத்து பணிகளும் நிறைவுற்று வெளியாகாமல் முடங்கிப்போன படங்களைப் பட்டியலிட்டால், அந்த எண்ணிக்கை கணிசமாகத் தேறும். அவற்றில் மிகச்சில மட்டும், ‘இதோ வர்றேன் அதோ வர்றேன்’ என்று செய்திகளில் மீண்டும் மீண்டும் தலைகாட்டியவாறு பயணிக்கும். அந்த வரிசையில் இடம்பெறுகிற ஒன்று ‘மத கஜ ராஜா’.
2013 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகத் திட்டமிடப்பட்ட இப்படம், நீண்டகாலக் காத்திருப்புக்குப் பிறகு இந்த ஆண்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இத்தனைக்கும் இப்படம் உருவாவதில் பெரிதாகத் தாமதம் ஏற்படவில்லை. ஏனென்றால், இதன் இயக்குனர் சுந்தர்.சி அந்த அளவுக்கு முன் மற்றும் பின் தயாரிப்பு பணிகளில் வேகமாகவும் சிறப்பாகவும் செயல்படக் கூடியவர். அதனால், ஒரு திரைப்படமாக வடிவம் பெற்ற பிறகு திரையரங்குகளை அடைவதில் அடுத்தடுத்து சில சுணக்கங்களை எதிர்கொண்டு முடங்கியது.
சுந்தர்.சியின் ஆதங்கம்!

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ‘மத கஜ ராஜா படம் வர்றது அதோட புரடியூசர்ஸ் கையில தான் இருக்கு. நானும் விஷாலும் நிறைய முயற்சி பண்ணி சோர்ந்துட்டோம்’ என்று தனது ஆதங்கத்தைக் கொட்டியிருந்தார்.
2016 வாக்கில் விஷாலும் கூட, ‘உடனடியாக மத கஜ ராஜா படத்தை வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று சொன்னார். ஆனால், எதுவும் தீர்வுக்கு வழி காட்டவில்லை.
படத்தைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்திற்கு இருந்த சில பொருளாதாரப் பிரச்சனைகளே அதற்குக் காரணம் என்று செய்திகள் வெளியாகின.
’என்ன பிரச்சனைகள் இருந்தாலும், அதனைக் கடந்து வந்து நல்லதொரு கவனிப்பைப் பெறும்’ என்றே ‘மத கஜ ராஜா’வில் சம்பந்தப்பட்ட பலர் ஊடகங்களில் சொல்லி வந்திருக்கின்றனர். அதற்குக் காரணம், இப்படத்தின் மீதான நம்பிக்கை.
கண்டிப்பாக, அதனை ஈடு செய்யும் வகையிலேயே இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். வரலட்சுமி, அஞ்சலி, ஜான் கொக்கன், ராஜேந்திரன், அஜய் ரத்னம், சுதா, சுவாமிநாதன், விச்சு விஸ்வநாத், ஜெயலட்சுமி என்று இதில் பெரும்பட்டாளமே நடித்துள்ளனர். சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா, சுப்பராஜு போன்றவர்களுடன், வில்லனாக சோனு சூத் இதில் நடித்திருக்கிறார்.
மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி ஆகிய மறைந்த நடிப்புக்கலைஞர்களின் பங்களிப்பும் இப்படத்தில் உண்டு.
ரிச்சர்ட் எம்.நாதனின் வண்ணமயமான ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல். – என்.பி.ஸ்ரீகாந்த் கூட்டணியின் கட்டுக்கோப்பான படத்தொகுப்பும் இதில் உள்ளன. நான், சலீம் என்று தான் நாயகனாக நடிக்கத் தொடங்கிய காலகட்டத்தில், விஜய் ஆண்டனி இசையமைத்த படம் இது. அதனால், அந்த நேரத்து விஜய் ஆண்டனியை இந்த ஆல்பத்தில் உணர முடியும்.
ஸ்ருதி ஹாசன், கார்த்திகா நாயர், டாப்ஸி பன்னு என்று வெவ்வேறு நாயகிகளைத் தேடி, இறுதியாக தீர்க்கமாக ஒரு முடிவெடுத்து வரலட்சுமி மற்றும் அஞ்சலியை ‘பைனல்’ செய்து அதற்கேற்றாற் போல எழுதப்பட்ட கதை இது.
‘ஊர் கூடிச் சேர்ந்திழுக்கும் தேர்’ போல, இப்படி ஒவ்வொரு அம்சமாகச் சேர்ந்து திரண்டு உருவான படம் தான் ‘மத கஜ ராஜா’. கிட்டத்தட்ட சகலகலா வல்லவன், முரட்டுக்காளை போன்ற கமர்ஷியல் படமாக இது இருக்கும்’ என்பதே சுந்தர்.சி முதல் அப்படம் சம்பந்தப்பட்ட பலரும் சொல்லி வந்தது.
அந்த காம்பினேஷன் தான் இன்று வரை இப்படம் குறித்த நினைவுகளை ரசிகர்கள் மனதில் உயிர்ப்புடன் இருக்கச் செய்து வருகிறது. இதில் வில்லனாக நடித்திருப்பவர் சோனு சூட். அவர் இயக்கி தயாரித்து நாயகனாக நடித்திருக்கும் ‘பதேஹ்’ படமும் வரும் 10ஆம் தேதியன்று வெளியாகிறது என்பது சுவையான இன்னொரு தகவல்.
ஆதலால், ‘கொஞ்சம் பழைய படம்’ என்ற நினைவூட்டலைத் தாண்டி சுவாரஸ்யமான கதை சொல்லலைக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் அப்படியே இருக்கிறது.
படங்களின் காத்திருப்பு!

முழுமையாகத் தயாராகிச் சில காலம் காத்திருப்பை எதிர்கொண்ட படங்கள் திரையரங்குக்கு வருவதென்பது புதிய விஷயமல்ல. கடந்த காலங்களிலும் இப்படிச் சில படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் சில வெற்றியைச் சுவைத்திருக்கின்றன.
பாலாவின் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘சேது’ அதற்கொரு உதாரணம். அது கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் காத்திருப்பு பட்டியலில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘மக்கள் ஆட்சி’ திரைப்படம் கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக ‘ட்ரெய்லர்’ ஒளிபரப்பப்பட்டு, பின்னர் வெளியாகிப் பெரும் வெற்றியைப் பெற்றது.
கமலுக்கு மீண்டும் கமர்ஷியல் அந்தஸ்தை தந்த கௌதமின் ‘வேட்டையாடு விளையாடு’, தனுஷ் நடித்த ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ ஆகியன சில காலம் தாமதமாகத் திரையை வந்தடைந்த படங்கள் தான். அந்த வரிசையில், சில ஆண்டு கால காத்திருப்பை எதிர்கொண்டு வருகிறது ‘துருவ நட்சத்திரம்’. அதன் பின்னணியிலும் பொருளாதாரம் சார்ந்த சிக்கல்கள் இருப்பதாகத் தகவல்.
2016ஆம் ஆண்டு வெளியாவதாக இருந்தது செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. ஆனால், ஐந்தாண்டுகள் கழித்து தான் அது வெளியானது. அதே இயக்குனர் சந்தானத்தை நாயகனாகக் கொண்டு இயக்கிய ‘மன்னவன் வந்தானடி’ படம் முழுமையாகத் தயாராகி இன்னும் திரைக்கு வராமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஜெயம் ரவியின் ‘பூலோகம்’, சிம்புவின் ‘வாலு’, அரவிந்த் சாமி நடித்த ‘சாசனம்’,
ஸ்ரீகாந்தின் ‘சதுரங்கம்’ என்று இந்தப் பட்டியலில் மேலும் சில படங்கள் இருக்கின்றன.
‘கில்லி’ வெளியாவதற்குச் சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் விஜய்யின் ‘உதயா’ வெளியானது. சிம்ரனுக்குத் திருமணமான பின்னர் அவசர அவசரமாக இரண்டு பாடல்கள் படம்பிடிக்கப்பட்டு அப்படத்தில் சேர்க்கப்பட்டன.
தீனா, சிட்டிசன் போன்ற மாபெரும் வெற்றிகளைக் கண்டபின்னர் வெளியான ‘என்னைத் தாலாட்ட வருவாளா’ திரைப்படம், அவர் காதல் கோட்டை, ரெட்டை ஜடை வயசு காலகட்டத்தில் நடித்தது.
சென்சார் போர்டின் கெடுபிடிகளால் முடங்கிக் கிடந்தது ஆர்.கே.செல்வமணியின் ‘குற்றப்பத்திரிகை’. சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அப்படம் தியேட்டர்களைச் சென்றடைந்து மறைந்து போனது.
ஆர்யா நடித்த முதல் படமான ‘உள்ளம் கேட்குமே’, சுமார் நான்காண்டு கால இடைவெளிக்குப் பிறகு வெளியாகி வெற்றி பெற்றது.
மேற்சொன்ன படங்களில் பல, தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட பொருளாதாரக் காரணங்களால் தடைகளைச் சந்தித்தவை. அது போகப் படைப்புரீதியான வேறுபாடுகள், சரிப்படுத்த முடியாத சிக்கல்கள், காப்பிரைட் பிரச்சனைகள் என்று அவற்றின் பின்னே வேறு சில காரணங்களும் உண்டு. ஒரே நேரத்தில் வெவ்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு, அவற்றில் ஒரு மொழிப்படம் மட்டும் வெளியாகித் தோல்வியடைந்த காரணத்தால் இதர பதிப்புகள் முடங்கிப் போனதும் உண்டு.
அப்படித் தடைகளைத் தாண்டி வந்த படங்களில் மிகச்சில வெற்றியைச் சுவைக்க முக்கியக் காரணம். சமகாலத்திற்கு ஏற்ற உள்ளடக்கம் அவற்றில் இருந்ததே.
அப்படத்தில் நடித்த கலைஞர்களின் நடை, உடை, பாவனைகள், தொழில்நுட்ப மேதைமையைத் தாண்டி, திரையில் ஓடும் படத்தோடு ரசிகர்கள் ஒன்ற முடிகிறதா, இல்லையா என்ற கேள்விக்கான பதிலே முக்கியக் காரணமாக இருந்து வந்திருக்கிறது.
அப்படி ரசிகர்களை ஈர்த்த படங்கள் சில காலத் தாமதங்களுக்குப் பிறகும் ‘புதிய படம்’ என்ற முத்திரையை ரசிகர்களிடத்தே பெறுகின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது அஜய் தேவ்கன் நடித்த ‘நாம்’ திரைப்படம். 2014ஆம் ஆண்டு வெளியாவதாக இருந்தது அப்படம். ’பத்தாண்டுகள் கழித்து வெளியாகிறது’ என்ற எண்ணம், அப்படம் குறித்த புரோமோஷன்களில் அப்பட்டமாகத் தெரிந்தது. நிச்சயமாக அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
அப்படிச் சில விஷயங்களில் மெனக்கெடலையும் கவனிப்பையும் செலுத்தினால் ‘மத கஜ ராஜா’ நல்லதொரு வரவேற்பைப் பெறக்கூடும். அது நிகழ்வது, மேலும் பல படங்களைக் காத்திருப்பு பட்டியலில் இருந்து அப்புறப்படுத்தி திரையை நோக்கி நகர வைக்க உதவிகரமாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எடப்பாடிக்கு செக்? உறவினர் வீட்டில் தொடரும் ஐடி ரெய்டு!
ஹெச்எம்பிவி… சுற்றுலா பயணிகள் மாஸ்க் அணிவது அவசியம்: நீலகிரி ஆட்சியர்!