பீகார் தேர்தல் ஆணையத்தின் தூதுவராக பிரபல நடிகை நீது சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். Vishal film actress appointed as bihar ECI icon
தமிழ் சினிமாவில் ‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘ஆதிபகவன்’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ உட்பட பல படங்களில் நடித்தவர் இந்தி நடிகை நீது சந்திரா. மிஷ்கினின் ‘யுத்தம் செய்’ படத்தில் இவர் ஆடிய ‘கன்னித் தீவு பெண்ணா’ பாடலுக்கும் கேமியோவாக வந்து நடனம் ஆடினார்.
இந்த நிலையில் அடுத்த சில மாதங்களில் நடைபெற இருக்கும் பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அம்மாநில தேர்தல் ஆணையத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் நீது சந்திரா.
பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் பிறந்தவரான அவர், விளையாட்டு வீரராக 9 முறை தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றுள்ளார். டேக்வாண்டோவில் இரண்டு டான் கருப்பு பெல்ட்களைப் பெற்றுள்ள அவர், 1997 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நடந்த உலக டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார். இதன்மூலம் தற்காப்பு விளையாட்டு போட்டியில் பங்கேற்ற பீகாரைச் சேர்ந்த முதல் வீராங்கனை என்ற பெயர் பெற்றார்.
அதன் பின்னர் மாடலிங்கில் கவனம் செலுத்திய அவர், 2005 ஆம் ஆண்டு ’கரம் மசாலா’ திரைப்படத்தின் மூலம் இந்தித் திரைப்படத் துறையில் அறிமுகமானார். அதன்பின்னர் தெலுங்கு, தமிழ் படங்களிலும் நாயகியாக நடித்தார். 2021ஆம் ஆண்டு ’நெவர் பேக் டவுன்: ரிவோல்ட்’ என்ற படத்தின் ஹாலிவுட்டிலும் அறிமுகமாகி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் அவரது தயாரிப்பு நிறுவனமான சம்பரன் டாக்கீஸ் மூலம் 2016ஆம் ஆண்டு வெளிவந்த ’மிதிலா மகான்’ படத்திற்காக தேசிய விருதை வென்று கவனம் ஈர்த்தார்.
இதற்கிடையே கடந்த 15 ஆண்டுகளாக பீகாரில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், உள்ளூர் திறமைகளை அறிமுகப்படுத்துவதற்கும், பெண் விவசாயிகளை ஆதரிப்பதற்கும், வேரூன்றிய பிராந்திய கலை மற்றும் குரல்களை உயர்த்துவதற்கும் உழைத்து வருகிறார்.
இந்த நிலையில் பீகார் தேர்தல் ஆணையத்தின் தூதுவராக பிரபல நடிகை நீது சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேர்தல் ஆணைய தூதராக நீது சந்திராவின் நியமனம் பீகாரின் அடையாளத்தை உலகளாவிய, தேசிய மற்றும் கலாச்சார நிலைகளில் உயர்த்திய ஒரு குடிமகனின் கொண்டாட்டமாகும். பீகாருக்கு அவரது பங்களிப்பு சினிமா, விளையாட்டு, கலாச்சார பாரம்பரியம் மற்றும் சமூக தாக்கம் முழுவதும் பரவியுள்ளது. இது தேர்தல் பிரச்சாரத்தின்போது மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிக்க மிகவும் தகுதியான மற்றும் சக்திவாய்ந்த தேர்வாக மாற்றியுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
