தன்ஷிகாவுக்கும் தனக்கும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக நடிகர் விஷால் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். vishal confirm his soulmate and marriage date
தமிழ்திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக கேட்கப்பட்டு கேள்விகளுள் ஒன்று ‘நடிகர் விஷாலுக்கு கல்யாணம் எப்போது’ என்பது தான்.
கடந்த 2019ஆம் ஆண்டு விஷாலுக்கும், ஆந்திராவை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எனினும் இருவருக்கும் இடையே உறவு முறிந்து திருமணம் நடைபெறவில்லை.
இதற்கிடையே நடிகர் சங்க தலைவரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை கட்டி முடித்த பின்பே திருமணம் என அறிவித்தார்.
ஏராளமான கடன் பிரச்சனை காரணமாக நடிகர் சங்க கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து எப்போ பில்டிங் கட்டி, எப்போ இவருக்கு கல்யாணம் நடக்க என்றப் பேச்சு கோலிவுட் வட்டாரத்திலேயே எழுந்தது.
இந்த நிலையில் நடிகர் விஷால், கார்த்தி, நாசர் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகளின் தொடர் முயற்சியால், தற்போது நடிகர் சங்க கட்டிடப் பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்பட உள்ளது.
இதனையடுத்து விஷால் திருமணம் குறித்து பேச்சு எழுந்த நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “அநேகமாக அடுத்த 4 மாதங்களில் எனது திருமணம் நடப்பது உறுதி. எனது பிறந்தநாளான ஆகஸ்ட் 29ம் தேதி கூட எனக்கு திருமணம் நடக்கலாம். பெண் பார்த்துவிட்டோம். பேசி முடித்துவிட்டோம். இது காதல் திருமணம் தான். ஒரு மாதமாக அந்தப் பெண்ணை காதலித்து வருகிறேன். அவர் யார் அவர் பெயர் என்ன என்பதை நேரம் வரும்போது சொல்கிறேன். விரைவில் நல்ல தகவல் சொல்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நடிகை சாய் தன்ஷிகா நடித்த ‘யோகி டா’பட விழா நேற்று (மே 19) மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய நடிகை சாய் தன்ஷிகா, “இந்த மேடையை எங்களின் திருமண அறிவிப்பு மேடையாக இருக்கும் என நினைக்கவில்லை. ஆனால் இப்போது அறிவிக்கிறேன். ஆகஸ்ட் 29 ஆம் தேதி விஷாலுடன் எனது திருமணம் நடைபெறும்” என்று அறிவித்தார்.
அதன்பின்னர் பேசிய நடிகர் விஷால், ”இதற்கு மேல் நான் மூடி மறைக்க முடியாது. என்னோட சோல்மேட் தன்ஷிகா. ஆம் நான் தன்ஷிகாவை முழுமையாக காதலிக்கிறேன். அவரை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். அவரை நல்லா பார்த்துக்கொள்வேன். நடிகர் சங்க கட்டிடம் பணி ஆகஸ்ட் 15 முடிந்துவிடும் என நினைக்கிறோம். அதை தொடர்ந்து என்னுடைய பிறந்தநாள் ஆகஸ்ட் 29 அன்றைய தினமே என்னுடைய திருமணம் நடைபெறும். தன்ஷிகாவை நான் வாழ்நாள் முழுவதும் இதே சிரித்த முகத்துடம் பார்த்துக்கொள்வேன்” என்று விஷால் தெரிவித்தார்.