ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று (ஜனவரி 31) சர்வதேச தூதரக ஒத்துழைப்புக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசினார்.
அப்போது, “எங்கள் தலைநகரான விசாகப்பட்டினத்திற்கு உங்களை நான் அன்புடன் வரவேற்கிறேன். ஆந்திராவில் தொழில் தொடங்குவது எவ்வளவு எளிமையானது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நானும் வைசாக் நகருக்குக் குடியேறுகிறேன்” என்று கூறினார்.
முன்னதாக, 2014 ஜூன் மாதம் ஆந்திரம், தெலங்கானா மாநிலப் பிரிவினைக்குப் பிறகு அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவித்து ஆட்சி நடத்தி வந்தார். தற்போது விசாகப்பட்டினம் தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளது.
1956-ல் ஆந்திரா சென்னையில் இருந்து பிரிக்கப்பட்டபோது கர்னூல்தான் தலைநகராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
