தமிழ் சினிமா இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், திரைக்கலைஞர்கள் எதிர்பார்க்கும் படமாக விருமன் உள்ளது.
முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியாகும் படங்கள் வணிகரீதியான எதிர்பார்ப்புடன் பார்க்கப்படும்.
ஆனால் இவற்றில் இருந்து வேறுபட்டதாக விருமன் எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் கனவில் மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய கார்த்தி இயக்குநர் அமீர் வற்புறுத்தல் காரணமாக பருத்திவீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
பிராமண சமூகத்தை சேர்ந்த கமல்ஹாசன் “தேவர் மகனாக” நடித்தால் பார்வையாளன் எப்படி ஏற்றுக்கொள்வான் என்ற கேள்வி அப்படத்தின் வியாபாரம் சம்பந்தமான பேச்சுவார்த்தையில் விநியோகஸ்தர்களால் அப்போது முன்வைக்கப்பட்டது.
அதே போன்ற கேள்வி வேறுவகையில் பருத்திவீரன் படத்தை தொடங்கிய நேரத்தில் இயக்குநர் அமீரிடம் எழுப்பப்பட்டது. அமெரிக்காவில் படித்த பையன் கிராமத்து கதாபாத்திரத்துக்கு எப்படி பொருத்தமாக இருப்பார்.

ஹைடெக் காதல் கதாநாயகனாக நடிக்க வைக்கலாமே என ஆலோசனை வழங்கினார்கள் என அப்போது கூறப்பட்டது. ஆனால் எல்லா விமர்சனங்களையும் 2007ல் வெளியான பருத்திவீரன் மெகா ஹிட் அடித்தது அதனை தொடர்ந்து
2010 ஆயிரத்தில் ஒருவன், பையா நான் மகான் அல்ல
2011 சிறுத்தை,
2012 சகுனி
2013 அலெக்ஸ் பாண்டியன் ஆல் இன் ஆல் அழகு ராஜா, பிரியாணி
2014 மெட்ராஸ்
2015 கொம்பன்
2016 தோழா
2017 காற்று வெளியிடை
2018 கடைக்குட்டி சிங்கம்
2019 தேவ், கைதி
2021 சுல்தான் ஆகிய படங்களில் கார்த்தி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். வெற்றி தோல்விகள் சமபலத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் 2015ல் முத்தையா இயக்கத்தில் கொம்பன் படத்தில் நடித்த கார்த்தி இரண்டாவது முறையாக நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டபோது மீண்டும் ஒரு ஜாதிப் படமா என்கிற விமர்சனங்கள் எழுந்தன.
இப்படத்தின் நாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானபோது தமிழ் சினிமா சற்று அதிர்ச்சிக்குள்ளாகி அதிர்ந்து ஆச்சர்யபட்டு போனது. மருத்துவம் படித்தவர் சர்ச்சைகளும், சங்கடங்களும் நிறைந்த சினிமாவில் நாயகியாக நடிக்க ஷங்கர் எப்படி சம்மதித்தார் என்கிற கேள்விகள் எழுந்தன.
இயல்பாகவே சினிமா மீது தீராத காதல் கொண்ட அதிதி நடிகையாகவேண்டும் என்ற விருப்பத்தை தந்தை ஷங்கரிடம் கூறியபோது மறுக்கவில்லை, ஆனால் கிளாமராக நடிக்க கூடாது என்ற கண்டிஷனுடன் அப்பா ஒப்புக்கொண்டார் என்கிறார் அதிதி ஷங்கர்.
நடிகர் சிவக்குமார் வாரிசு கார்த்தி கதாநாயகன், இயக்குநர் ஷங்கரின் மகள் கதாநாயகி, தயாரிப்பது நடிகர் சூர்யா-ஜோதிகா என்பதால் ” விருமன்” படத்தின் மீதான எதிர்பார்ப்பு வழக்கத்தை காட்டிலும் அதிகரித்து உள்ளது. அதிதி ஷங்கருக்கு இது அறிமுகப்படம் என்பதால் இப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

தனது முதல் படத்திலேயே கிராமத்து நாயகியாக நடித்துள்ளார் அதிதி ஷங்கர். பொதுவாக அறிமுக நடிகைகள் படம் வெளியாகி வெற்றி பெரும் வரை அதிகம் பேச மாட்டார்கள் அடக்கியே வாசிப்பார்கள். ஆனால் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் கதாநாயகி என உறுதியாகி படப்பிடிப்பு தொடங்கியபின் ஏராளமான படங்களில் நடித்த கதாநாயகி போன்று பேச தொடங்கினார்.
மதுரையில் நடைபெற்ற விருமன் ஆடியோ வெளியீட்டு விழாவில் அனைவரது கவனத்தையும் தன்பால் ஈர்க்கும் வகையில் பொதுமேடைகளில் ரத்தின சுருக்கமாக பேசக் கூடிய யுவன் ஷங்கர் ராஜாவை மேடைக்கு அழைத்து நடனமாடி கார்த்தியின் ரசிகர்கள் மட்டுமல்லாது வெகுஜன சினிமா ரசிகர்களும் அதிதி ஷங்கரின் பேச்சை கவனிக்க தொடங்கியுள்ளனர்.

தற்போது சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும்” மாவீரன்” படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட பின் நான் யாருடன் எல்லாம் நடிக்க ஆசை வைத்துள்ளேன், அதில் இரண்டு நிறைவேறியுள்ளது என பத்திரிகையாளர்களிடம் பேசியுள்ளார் அதிதி. அவல் இல்லாமலே மெல்லக் கூடிய ஊடகங்கள் இப்போது மற்ற நடிகர்கள் யாராகவெல்லாம் இருக்கும் என்கிற பட்டியலை அவரவர் வசதிக்கு எழுதிவருகின்றனர். படத்தின் நாயகன் கார்த்தி, இயக்குநர் முத்தையா இவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு அதிதி ஷங்கர் கிராமத்து பெண்ணாக அறிமுகமாகும் விருமன் என செய்திகளில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
2009 தொடங்கி கடந்த 12 வருடங்களாக பல்வேறு வெற்றிப்படங்களின் கதாநாயகன் கார்த்தி, குட்டிப்புலி தொடங்கி கடைசியாக இயக்கிய தேவராட்டம் வரை வணிகரீதியாக வெற்றிப்படங்களை இயக்கிய முத்தையா இருவரையும் பின்னுக்கு தள்ளி தான் அறிமுகமாகும் விருமன் படத்தின் மூலம் சமூக வலைதளம், ஊடகங்களில் முதல் நிலைக்கு வந்திருக்கிறார் அதிதி.

கதாநாயகர்களும், இயக்குநர்களும் ஆதிக்கம் செலுத்தும் திரையுலகில் அதிதி ஷங்கர் ஆச்சர்ய குறியீடாக பார்க்கப்படுகிறார்.
இன்று உலகம் முழுவதும் வெளியாகும்” விருமன்” படத்தில் பார்வையாளர்களை வெற்றிகொள்ளப்போவது அதிதி ஷங்கரா அல்லது வழக்கம் போல் கதாநாயகன் கார்த்தியா? என்பதே ரசிகர்களிடம் விவாதப்பொருளாக உள்ளது.
எல்லா திறமைகளும் நிரம்பிய தமிழ்மண்ணை சார்ந்த தமிழ் பெண் தமிழ் படத்தில் கதாநாயகியாக வெற்றிகொள்வாரா, காத்திருப்போம்.
இராமானுஜம்
