தற்போது நடைபெற்றுவரும் 2024 ஐபிஎல் தொடரின் மீது கிரிக்கெட் ரசிகர்களின் முழு கவனமும் இருந்தால் கூட, ஜூன் 2 அன்று துவங்கவுள்ள 2024 டி20 உலகக்கோப்பை தொடரை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
குறிப்பாக, 11 ஆண்டுகளாக உள்ள ஐசிசி கோப்பை தாகத்தை இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு தீர்க்குமா என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், இந்த தொடரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், 2024 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலியை நீக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த அஜித் அகர்கரை முன்மொழிந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இது, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் விமர்சகர்கள், கிரிக்கெட் ஜாம்பவான்கள் என பலரிடமும் விமர்சனத்தை பெற்றிருந்தது.
மேலும், ஐபிஎல் தொடரின்போது இது குறித்து சூசகமாக பேசியிருந்த விராட் கோலி, கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்க மட்டுமே என்னுடைய பெயர் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் உள்ளிட்ட முக்கிய தொடர்களை தவறவிட்ட கோலி, மிக நீண்ட ஓய்வுக்கு பிறகு, ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்கினார். இந்த தொடரில் தற்போது வரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 1 சதம், 2 அரைசதம் என 105.33 சராசரியுடன் 316 ரன்களை குவித்துள்ளார்.
மேலும், தற்சமயத்தில் 2024 ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கோலி முதலிடத்தில் உள்ளார்.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலியை சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
முன்னதாகவே, 2024 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் ரோகித் சர்மா தான் வழிநடத்துவார் என பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்திருந்தார். அவர் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கும் பட்சத்தில், மற்றொரு துவக்க அட்டாக்காரர் இடத்திற்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
அதேபோல, விக்கெட் கீப்பருக்கான இடத்திற்கும் ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், துருவ் ஜூரேல் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவிவரும் நிலையில், பிசிசிஐ மீண்டும் ரிஷப் பண்டை அணியில் சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022-ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட், சுமார் 14 மாத போராட்டத்திற்கு பிறகு, ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்கினார். இந்த தொடரில், தற்போதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2 அரைசதங்களை விளாசியுள்ளார்.
அதேபோல, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன், தற்போது சிஎஸ்கே அணிக்காக மிக சிறப்பாக விளையாடி வரும், ஷிவம் துபேவும் அணியில் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பந்துவீச்சாளர்களில், ஜஸ்பிரிட் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோரே பிசிசிஐ-யின் முதல் சாய்ஸாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் மட்டுமின்றி, அதிரடிக்கு பெயர் போன ரிங்கு சிங், 2024 ஐபிஎல் தொடரில் வேகத்தில் மிரட்டிவரும் மயங்க் யாதவ் ஆகியோரின் பெயர்களும் இந்திய அணியின் பட்டியலில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தூங்கு மூஞ்சி க்யூட்டி… ஜிவி இசையில் “டியர்” படத்தின் புது பாடல் ரிலீஸ்!
வேலைவாய்ப்பு: சென்னை பல்கலைக்கழகத்தில் பணி!
இஸ்ரேல் – ஹமாஸ்: போர் நிறுத்தத்துக்கு எகிப்தின் புதிய திட்டம்!
துபாய் டூ சென்னை: மக்களவை தேர்தலுக்காக ரூ.200 கோடி ஹவாலா பணம்!