விதி மீறும் பட்டாசு ஆலைகள்: ஆட்சியர் கடும் எச்சரிக்கை!

By Kavi

|

Published on 1 Feb 2023, 4:57 PM

விருதுநகர் மாவட்டத்தில் விதி மீறி செயல்பட்ட 14 பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தீபாவளி மற்றும் விழாக்கள் விஷேசங்கள் என்றால் பட்டாசும் அங்கமாகிப்போனது. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி சாத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன.

ADVERTISEMENT

இதில் சில ஆலைகள் விதிமுறைகள் மீறி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு பெரும் விபத்துகள் உயிர்ச்சேதம் ஏற்படுவது சகஜமாகிப்போனது.

கடந்த மாதத்தில் மட்டுமே அடுத்தடுத்து பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்பட்டு 7 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.

ADVERTISEMENT

இதனால் பட்டாசு ஆலைகளில் கடந்த சில நாட்களாக கடுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விதி மீறி உற்பத்தி செய்த 14 பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துக்களைக் குறைப்பது,

ADVERTISEMENT

மற்றும் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்வதுடன், விபத்தில்லா விருதுநகரை உருவாக்குவது தொடர்பாக, விருதுநகர் மாவட்ட ஆட்சியரால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அரசு விதி முறைகளுக்கு முரணாக, சிறப்பு ஆய்வுக் குழுக்களின் ஆய்வின்போது உள்குத்தகை நடவடிக்கைகள் மற்றும் அதிகளவிலான பட்டாசு பொருட்கள் இருப்பு வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

Violating crackers factories

சிவகாசி வட்டத்திற்குட்பட்ட நாகர் பயர் ஒர்க்ஸ், திருச்செல்வி பயர் ஒர்க்ஸ், தமயந்தி பயர் ஒர்க்ஸ் ஆகிய 3 பட்டாசு ஆலைகள், வெம்பக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட நயா கார்னேசன் பயர் ஒர்க்ஸ், ஸ்ரீ பாலகுரு பயர் ஒர்க்ஸ்,

எம்.பி. பயர் ஒர்க்ஸ், தாமரைக் கண்ணன் பயர் ஒர்க்ஸ், குரு பயர் ஒர்க்ஸ், சண்முகா பயர் ஒர்க்ஸ், முத்துகணேஷ் பயர் ஒர்க்ஸ், சீகல் பயர் ஒர்க்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய 8 பட்டாசு ஆலைகள்,

சாத்தூர் வட்டத்திற்குட்பட்ட ராஜேசுவரன் பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலை, ஸ்ரீவில்லி புத்தூர் வட்டத்திற்குட்பட்ட என்.எஸ்.வி.பயர் ஒர்க்ஸ்,

தினேஷ் பயர் ஒர்க்ஸ் ஆகிய 2 பட்டாசு ஆலைகள் என மொத்தம் 14 பட்டாசு தொழிற்சாலைகளின் சட்ட உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள் அனைத்தும், உரிமைதாரர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும்,

உரிமைதாரர்கள் தங்களது பட்டாசு தொழிற்சாலைகளை விதிமுறைகளுக்கு முரணாக வேறு நபர்களுக்கு உள்குத்தகைக்கு விடக் கூடாது என்றும்,

ஆய்வின் போது உள்குத்தகை விடப்பட்டது கண்டறிய ப்பட்டால் இனி வரும் காலங்களில் மேற்கண்ட பட்டாசு தொழிற் சாலை உரிமையாளர்கள் மீதும்,

உள்குத்தகை நடவடிக்கையில் ஈடுபட்டோர் மீதும் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆலைகளின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதுடன்,

ஆலை உரிமைதாரர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் பட்டாசு உற்பத்திக்கான உரிமங்கள் பெறுவதில் இருந்து நிரந்தரமான தடை உள்ளிட்ட மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என‌ அதில் கூறப்பட்டுள்ளது.

சக்தி

காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்களின் லிஸ்ட் இதோ!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel