விண்வெளி நாயகா பாடலை கமல் சாருக்காக எழுதவில்லை. சக்திவேல் நாயக்கருக்காக தான் எழுதினேன் என பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா தெரிவித்துள்ளார். vinveli nayaga song not for Kamal – Karthik Netha
சிம்புவின் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான தொட்டி ஜெயா படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர் கார்த்திக் நேத்தா.
அதன்பின்னர் தமிழ் சினிமாவிற்காக எத்தனையோ பல அழகான, அர்த்தம் செறிந்த பாடல்களை எழுதியுள்ளார்.
குறிப்பாக வாகை சூடவா படத்தில் இடம்பெற்ற ‘போறானே… போறானே’, நெடுஞ்சாலை படத்தில் ‘தாமிரபரணியில் நீந்தி வந்து’, 96 படத்தில் ‘தி லைஃப் ஆஃப் ராம்’, ’காதலே காதலே’, அமரன் படத்தில் ’ஹே மின்னலே’ என அவரது அழகான பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார் கார்த்திக் நேத்தா.
அவர் எழுதிய அஞ்சு வண்ணப் பூவே, விண்வெளி நாயகா இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுவருகிறது.
இந்த நிலையில் முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் எழுதியது குறித்த தனது அனுபவத்தை சினிமா விகடன் யூடியூப் சேனலுக்கு பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், “மணி சார் ஆபிசில் முதலில் எழுதிய பாடல் அஞ்சு வண்ணப் பூவே தான். அது முடிந்ததும் ‘கார்த்தி அடுத்த பாட்டை எழுதுவோமா?’ என ரஹ்மான் சார் கேட்டார். அவருக்கு 2 ஆஸ்கர் வாங்குன மாறி, எனக்கு இந்த இரண்டு பாட்டு இருந்துச்சி.
முதலில் ’விண்வெளி நாயகா’ டிராக்கை எனக்கு இமெயிலில் அனுப்பினார்கள். அதில் ‘Space hero’ என்ற பெயரிட்டிருந்தது. அப்போது மணிசார் ‘கார்த்தி இந்த ஸ்பேஸ் ஹீரோ என்ற வார்த்தையை தான் பாடலின் தொடக்கத்தில் நாம் காட்ட வேண்டும், உலகத்துக்கே நாயகன் என்பது மாறி வேணும்’னு கேட்டார்.
அதனால நான் ரஹ்மான் சார் ஆரம்பித்து வைத்ததையே வைத்து, ‘விண்வெளி நாயகா’ எனக் குறிப்பிட்டு பாடலைத் தொடங்கினேன். அதற்கு பிறகு அதில் நடந்தது எல்லாமே மேஜிக் தான். பாடல் பைனல் ஆனதும் ரஹ்மான் சார் பார்த்துவிட்டு, ’நைஸ்’ என்றார். இரண்டு பேருக்குமே பாடல் பிடித்திருந்தது.
நான் பாடல் எழுதும்போது பெரும்பாலும் கதாப்பாத்திரத்தை மட்டும் தான் மனதில் வைத்திருப்பேன். சக்திவேல் நாயக்கர் தான் எனக்கு மண்டைல இருந்தாரு, கமல் சார் இல்ல.
’சக்திவேலை நினைத்து ஒரு பெண் ஏக்கத்துடன் பாடுகிறாள், ஒரு ஏக்கப் பாடலாக தான் வேண்டும்’ என்று மணி சார் ஏற்கெனவே எனக்கு சிச்சுவேஷன் சொல்லியிருந்தார். அதனால் விண்வெளி நாயகா பாடலை எழுதும்போது என் மண்டைல கமல் சார் வரவே இல்லை. பாடலைக் கேக்கும்போது அது உங்களுக்குத் தெரியும்” என நேத்தா தெரிவித்துள்ளார்.
