தகுதி நீக்கத்தால் வினேஷ் போகத் ‘சதி’க்கு பலியாகிவிட்டார் என இந்திய முன்னாள் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் காட்டமாக விமர்சித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று (ஆகஸ்ட் 7) இரவு நடைபெற இருந்த இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் சாரா ஹில்டெப்ராண்டியை சந்திக்க இருந்தார் இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத்.
இதற்கிடையே இன்று காலை நடத்தப்பட்ட உடல் எடை சோதனையில் நிர்ணயித்த 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிக எடை இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் அவர் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற வாய்ப்பையும் இழந்தார்.
இதனையடுத்து அவர் பதக்கம் வெல்வார் என பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்த ஒட்டுமொத்த இந்திய மக்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து பாஜக உறுப்பினரும், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற வீரருமான விஜேந்தர் சிங் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ”தனது தங்கப் பதக்கப் போட்டிக்கு முன் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் மூலம் வினேஷ் போகத் ‘சதி’க்கு பலியாகிவிட்டார்.
எடையை குறைக்கும் வாய்ப்பு வினேஷுக்கு கிடைத்திருக்க வேண்டும். இது இந்தியா மற்றும் இந்திய மல்யுத்த வீரர்களுக்கு எதிரான மிகப்பெரிய சதி.
வினேஷ் போகத் செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியது. அந்த மகிழ்ச்சியை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை.
எங்களைப் போன்ற மல்யுத்தம், பாக்ஸிங் வீரர்களால் ஒரே இரவில் 5 முதல் 6 கிலோ வரை எடையை குறைக்க முடியும். 100 கிராம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. எடையை குறைப்பது மிகவும் கடினம்தான். ஆனால், பசியையும், தாகத்தையும் எப்படி கட்டுப்படுத்துவது என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
இந்தியா விளையாட்டில் சிறந்த நாடாக உயர்வதை விரும்பாத சிலர் சதி செய்திருக்கின்றனர். 100 கிராம் எடையைக் குறைக்க அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும்”என்று விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ”நானும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றவன் முறையில், எனது அனுபவத்தில் நான் இதுபோன்ற எதையும் பார்த்ததில்லை.
ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற முதல் இந்தியரான விஜேந்தர், விளையாட்டு வீரர்கள் உணவு உட்கொள்வதைக் காட்டிலும் அடுத்த போட்டிக்கு தங்களை தயார் செய்வது மற்றும் எடைக் கட்டுப்பாட்டில் தான் கவனம் செலுத்துவார்கள்.
எங்களுக்கு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் தேவையில்லை, முதலில் எங்களுக்கு உடலை அடுத்த போட்டிக்கு தயாராவது முக்கியம்.
அவருக்கு மறுநாள் முக்கியமான ஒரு போட்டி இருப்பது தெரியும். எனவே, எடை கட்டுப்பாடு எங்கள் முன்னுரிமை பட்டியலில் முதன்மையானது” என்று விஜேந்தர் சிங் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வினேஷ் தகுதிநீக்கம்: எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்!
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குறித்து பேச்சு : அப்பாவுக்கு சம்மன்!