மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டார் என்று மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர் வினேஷ் போகத்.
தற்போது பாரிஸில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட அவர், 50 கிலோ எடைப்பிரிவில் சிறப்பாக விளையாடினார்.
4 முறை உலக சாம்பியன் மற்றும் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஜப்பானின் யு சுசாகியை தோற்கடித்தார்.
எப்படியும், தங்கம் வெல்வார் என்று ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட கூடுதலாக 100 கிராம் இருப்பதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால், இனி மல்யுத்த போட்டியில் கலந்துகொள்ள போவதில்லை என கூறி ஓய்வை அறிவித்துள்ளார். அதில் இனியும் போராட எனக்கு சக்தி இல்லை என்று வினேஷ் போகத் கூறிய நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
அவர் பிறந்த மாநிலமான ஹரியானா அரசு “வினேஷ் போகத் எங்களுக்கு எப்போதும் ஒரு சாம்பியன்தான். ஹரியானா அரசு அவரை ஒரு பதக்கம் வென்ற வீரரைப் போலவே வரவேற்று கௌரவப்படுத்தும். வெள்ளி பதக்கம் வென்றால் என்ன மரியாதை, வெகுமதி, வசதிகள் வழங்கப்படுமோ அவை அனைத்தும் அவருக்கு வழங்கப்படும். வினேஷ் போகத்தை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று கூறியுள்ளது.
இந்நிலையில் வினேஷ் போகத் ஓய்வை அறிவித்துள்ள ட்வீட்டை டேக் செய்து, “நீ தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டிருக்கிறாய். நீ எப்போதும் எங்களுக்கு வெற்றியாளர்தான். நீ இந்தியாவின் மகள் அல்ல… இந்தியாவின் பெருமை” என்று பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா