தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வுக்காக இரண்டு நாள் பயணமாக வருகிற நவம்பர் 28ஆம் தேதி விழுப்புரம் செல்லவிருக்கும் நிலையில், அங்கு கட்டப்பட்டிருக்கும் மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்க பணிகளை அமைச்சர் எ.வ.வேலு இன்று (நவம்பர் 22) பார்வையிட்டார்.
தமிழ்நாட்டில் அரசியல் நலத்திட்டங்கள் பொதுமக்களைச் சரியாக சென்றடைகிறதா என்பதை நேரில் சென்று ஆய்வு செய்யும் வகையில் ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
கோவை, விருதுநகர், அரியலூர், மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கள ஆய்வுக்காக சென்றுள்ளார்.
இந்த நிலையில் வருகிற நவம்பர் 28 மற்றும் 29ஆம் தேதி கள ஆய்வுக்காக விழுப்புரம் செல்லவிருக்கிறார் ஸ்டாலின்.
விழுப்புரத்தில் வழுதா ரெட்டி ஏரிக்கரை அருகே, 1987-ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தின்போது, காவல் துறையின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான 21 சமூக நீதிப் போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தையும், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு அரங்கத்தையும் ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளார்.
பின்னர் 3000 பேருக்கு நலத்திட்டங்களை வழங்கவிருக்கிறார்.
ஏ.கோவிந்தசாமி 1952, 1957 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வளவனூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் 1967ஆம் ஆண்டில் திமுக வேட்பாளராக முகையூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.
1967ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் தலைமையில் அமைந்த தமிழக அமைச்சரவையில் இவர் விவசாய துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.
திமுக உறுப்பினராக இவரது மகன் ஏ.ஜி.சம்பத் கட்சி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சமீபத்தில்தான் பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில் விழுப்புரத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று விழுப்புரம் சென்றார்.
அவருடன் வனத்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் ஆட்சியர் பழனி, விக்கிரவாண்டி எம்.எல்.ஏ அன்னியூர் சிவா பொதுப்பணித்துறை மாவட்ட அதிகாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இவர்களுடன் பிரபல பந்தல் அமைப்பாளர் ‘பந்தல்’ சிவாவும் உடனிருந்தார். இவர்தான் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவிற்கான பந்தலை அமைத்து வருகிறார்.
இந்த கள ஆய்விற்காகச் செல்லும் ஸ்டாலின் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கும் அரசு பயணியர் மாளிகையில் தங்கவுள்ளார்.
இந்த மாதம் தொடக்கத்தில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிக்காக விழுப்புரம் சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இதே அரசு பயணியர் மாளிகையில் தான் தங்கினார். அப்போதே அவரது வருகையை ஒட்டி இந்த மாளிகை புதுப்பிக்கப்பட்டது.
தமிழகத்தின் வட மாவட்டங்கள் வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதி. வன்னியர் சாதியை சேர்ந்த ஏ.கோவிந்தசாமிக்கும் இடஒதுக்கீடுக்காக உயிர்நீத்த வடதமிழகத்தைச் சேர்ந்த 21 பேர்களுக்கு, வன்னியர்கள் அதிகமாக வாழும் விழுப்புரத்தில் மணிமண்டபம் திறந்து வைப்பது திமுக அரசின் மாஸ்டர் ஸ்ட்ரோக்காக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
-வணங்காமுடி, அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு : லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு!
மதுரை, திருச்சியில் விரைவில் டைடல் பார்க்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
குடியரசுத் தலைவரை வரவேற்க செந்தில் பாலாஜியை அனுப்பலாமா? ஸ்டாலின் நடத்தும் ஆலோசனை!