நிரந்தரமாக கல்குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் மறியல்!

Published On:

| By admin

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெவ்வயல்பட்டி கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே வத்தனாக்குறிச்சி ஊராட்சியில் வெவ்வயல்பட்டியில் தனியார் கல்குவாரி உள்ளது. இந்தக் கல்குவாரி கிரஷர் மூலம் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு வகையான நோய்கள் பரவுவதாகவும், வீடுகளில் அதிர்வு ஏற்படுவதாகவும் குடிநீர் மாசு படுவதாகவும் கூறி ஏற்கனவே கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை தலைமையில் அந்த பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து கல்குவாரி முன்பு மறியல் போராட்டம் நடத்தினர்.

பின்னர் பேச்சுவார்த்தைக்கு பின் குவாரியை மூடுவதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் அந்த கல்குவாரி தொடர்ந்து இயங்கி வருவதாகவும், இதனை நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கூறி சின்னத்துரை எம்.எல்.ஏ தலைமையில் அந்தப் பகுதி கிராமமக்கள் கல்குவாரி முன்பு நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த கீரனூர் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் அனுமதியின்றி குவாரி இயங்காது என கூறியதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

**-ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share